×

கோடப்பமந்து கால்வாயில் பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணியை துவங்க நடவடிக்கை

ஊட்டி : ஊட்டி கோடப்பமந்து கால்வாயில் பழுதடைந்த பாதாள சாக்கடை குழாய்களை  மாற்றும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் ஓரிரு நாட்களில் மீண்டும்  துவங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஊட்டி ஏரி ஆங்கிலேயர்  காலத்தில் குடிநீர் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது. காலப்போக்கில்  கழிவுநீர் கலந்து ஏரி நீர் மாசடைய துவங்கியது. நகரின் நடுவே பயணிக்கும்  கோடப்பமந்து கால்வாயில் வரும் தண்ணீர் ஏரியில் கலக்கிறது. கால்வாயின்  இருபுறமும் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது  நிறுவனங்களில் இருந்து அனைத்து விதமான கழிவுகளையும் இதில் கொட்டி  விடுகின்றனர்.

இதுதவிர, மழை சமயங்களில் அடித்து வரப்படும் மண் குவியல்களும்  ஏரியில் குவிந்துள்ளன. கால்வாயின் நடுவே பல ஆண்டுகளுக்கு முன்பு  அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை குழாய்களில் இருந்து கழிவுநீர் கசிந்து ஏரி  அசுத்தமடைந்து வருகிறது. இதனை தொடர்ந்து, ஊட்டி நகராட்சி சார்பில் ரூ.5  கோடி மதிப்பில் கோடப்பமந்து கால்வாயை தூர்வாறும் பணிகள் மற்றும் பழுதடைந்த பாதாள சாக்கடை குழாய்களை மாற்றி ஆழ்துழை துவாரங்கள்  கட்டும் பணிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் துவக்கப்பட்டது.

இப்பணிகளுக்காக,  புதிதாக குழாய்கள் கொண்டு வரப்பட்டன. மேலும் ஜேசிபி இயந்திரங்களின்  உதவியுடன் ஏடிசி லோயர் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் தூர்வாரும் பணிகள்  மேற்கொள்ளப்பட்டன. இதனிடையே, இந்த சூழலில் கடந்த இரு மாதங்களுக்கும்  மேலாக கோடப்பமந்து கால்வாயில் தூர்வாரும் மற்றும் புதிய பாதாள சாக்கடை  குழாய்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படாமல் பாதியில் நிற்கிறது.

இதனால்,  கழிவுநீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.  நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் கூறுகையில்,``ஊட்டி நகரில் தொடர்ந்து  பெய்து வரும் மழை காரணமாக கால்வாயில் அதிகளவு தண்ணீர் வருவதால் பணிகளில்  பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் பணிகள் துவக்கப்படும்’’ என்றார்.

Tags : Godappamandu canal , Ooty: Delay in replacement of faulty sewerage pipes in Ooty Godappamandu canal in a couple of days
× RELATED கோடப்பமந்து கால்வாயில் ரூ.5.40 கோடியில்...