மூன்று ஆண்டுக்கு முன் மூடப்பட்டது வனவிலங்குகளின் புகலிடமாக மாறி வரும் எச்பிஎப் தொழிற்சாலை வளாகம்

ஊட்டி : மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட ஊட்டி எச்பிஎப் தொழிற்சாலை வளாகம் வனப்பகுதியாக மாறி வருவதுடன் வனவிலங்குகளின் புகலிடமாக மாறியுள்ளது.

ஊட்டி - கூடலூர் சாலையில் இந்து நகர் பகுதியில் வனத்துறை நிலம் 320 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு பெற்று 1960ல் காமராஜர் ஆட்சி காலத்தில் இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை துவங்கப்பட்டது. பல்வேறு கட்டுமான வசதிகளுடன் பல்லாயிரக்கணக்கான பணியாளர்களுடன் தெற்காசியாவின் புகழ்பெற்ற போட்டோ பிலிம் தொழிற்சாலையாகக் கொடிகட்டி பறந்தது.

இங்கு தயாரிக்கப்பட்ட கருப்பு வெள்ளை பிலிம்கள் மற்றும் எக்ஸ்ரே பிலிம்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்நிலையில், 1990ல் உலக மயமாக்கல் கொள்கை, தனியார் பிலிம் நிறுவனங்கள் வரத்து, புதிய தொழில்நுட்பங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள் வரவு போன்ற காரணங்களால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிலிம்களின் மவுசு குறைய துவங்கியது.

இதனால், படிப்படியாக ஏற்றுமதியும் குறைந்தது மட்டுமின்றி, உள்நாட்டிலும் இதன் மவுசு குறையவே, எச்பிஎப் தொழிற்சாலை நஷ்டத்திற்கு தள்ளப்பட்டது. இங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் படிப்படியாக விருப்ப ஓய்வில் சென்றனர். இதனால், கடந்த 2018ம் ஆண்டு முதல் பயன்பாடின்றி மூடப்பட்டது.

நீலகிரியில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படும் என அரசு அறிவித்த போது மூடப்பட்ட எச்பிஎப்., கட்டிடம் மருத்து கல்லூரியாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த கட்டிடம் பயன்படுத்தப்படவில்லை. இதனிடையே, மூடப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில் இந்தத் தொழிற்சாலை வளாகம், தற்போது செடி கொடிகள், மரங்கள், முட்புதர்கள் வளர்ந்து பறவைகள், காட்டு மாடுகள், கடமான்கள் மற்றும் சிறுத்தை, புலி, செந்நாய் போன்ற விலங்குகளின் புகலிடமாக மாறியிருக்கிறது.

தொழிற்சாலை வளாகம், குடியிருப்புகளுக்கு செல்லும் பாதைகளில் சிறுத்தை, காட்டுமாடுகள் போன்றவற்றின் காலடி தடங்களை பார்க்க முடிந்தது. தொழிற்சாலை அதிகாரிகள், தொழிலாளர்கள் வசித்து சென்ற நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் அனைத்தும் புதர் மண்டி காட்சியளிக்கின்றன. சுற்றுச்சூழல் ஆர்வலர் கூறுகையில்,``தொழிற்சாலை அமைக்கப்படுவதற்கு முன்பு வனமாக இருந்த இப்பகுதி வனவிலங்குகளின் வாழ்விடமாக இருந்தது.

தொழிற்சாலை நிறுவப்பட்டதற்கு பின் வன விலங்குகள் இடம்பெயர்ந்து விட்டன. தற்போது, தொழிற்சாலை முழுமையாக மூடப்பட்ட நிலையில், மீண்டும் வன விலங்குகள் வர தொடங்கி உள்ளன. நீலகிரியை தாயகமாக கொண்ட தாவரங்கள் வளர்ந்து வருவதுடன், அதனுடன், அந்நிய களை தாவரங்களும் அதிகமாக ஆக்கிரமித்துள்ளன’’ என்றார்.

Related Stories: