×

அண்ணா பல்கலை. முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு புகார்!: விசாரணை அறிக்கையை முதல்வரிடம் தாக்கல் செய்தது கலையரசன் குழு..!!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு குறித்த புகாரில் விசாரணை அறிக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்யப்பட்டது. முறைகேடு தொடர்பாக முன்னாள் நீதிபதி கலையரசன் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டார். அச்சமயம் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி நியமனத்தில் பணம் பெற்றதாகவும், மகளை முறைகேடாக பணியில் அமர்த்தியதாகவும், பொருட்கள் வாங்குதல் உள்ளிட்ட பணிகளில் சுமார் ரூ.200 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாகவும் புகார்கள் அளிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, சூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி,  புகார்கள் குறித்தும், புகார் அளித்தவர்கள், பல்கலைக் கழக அதிகாரிகளிடமும் கலையரசன் தலைமையிலான ஆணையம் தொடர் விசாரணை நடத்தி வந்தது. கடந்த ஜூன் மாத இறுதியில் சூரப்பா மீதான முறைகேடு புகார் விசாரணை நிறைவு பெற்றது.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு புகார் குறித்து சென்னை தலைமை செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நீதியரசர் கலையரசன் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். இந்த அறிக்கையின் அடிப்படையில் சூரப்பா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Anna University ,Surappa ,Kalaiyarasan , Anna University., Surappa, Investigation Report, Kalaiyarasan Committee
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...