×

ஆடி அமாவாசையை முன்னிட்டு வீரராகவர் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்: வாசலில் சூடம் ஏற்றி வழிபாடு

திருவள்ளூர்: திருவள்ளூர் வைத்திய ஸ்ரீவீரராகவ பெருமாள் கோயில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும். இந்த கோயிலில் அமாவாசை தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கோயில் குளத்தில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.  குறிப்பாக ஆடி அமாவாசை என்பதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வைத்திய ஸ்ரீவீரராகவ பெருமாள் கோயிலுக்கு வந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வேண்டுதலை நிறைவேற்றுவார்கள்.

ஆனால் தற்போது கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு உத்தரவின்பேரில் சாமி தரிசனம் ரத்து செய்து கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது.  இந்நிலையில், ஆடி அமாவாசாயை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவியத்தொடங்கினர். இதனால் மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமார் உத்தரவின்பேரில் போலீஸ் டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இருப்பினும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். மேலும், கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்ற அரசின் விதிமுறையை மீறி நேற்று காக்களூர் ஏரிக்கரையில் அமைந்துள்ள பாதாள விநாயகர் கோயில் அருகே ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். இதனைத்தொடர்ந்து, திருவள்ளூர் வைத்திய ஸ்ரீவீரராகவ பெருமாள் கோயில் நுழைவு வாயிலின் முன்பு கற்பூரம் ஏற்றி வழிபட்டு சென்றனர்.


Tags : Veeragavar Temple , Audi New Moon, Veeragavar Temple, Devotees, Worship
× RELATED இன்று அதிகாலை 5 மணிக்கு வீரராகவர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு