×

ரூ. 2 கோடியுடன் நகைக்கடை அதிபர் ராஜஸ்தனுக்கு ஓட்டம்?... பொதுமக்கள் கடைய முற்றுகையிட்டு போராட்டம்: மதுராந்தகம் அருகே பரபரப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே தீபாவளி சீட்டு பணம் மற்றும் அடகு வைத்த 500 சவரன் நகை என ரூ. 2 கோடியுடன் நகைக்கடை அதிபர் திடீர் என தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர், ராஜஸ்தானுக்கு தப்பி சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே முதுகரை கிராமம் உள்ளது. இங்கு, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தினேஷ் குமார் என்பவர் ஸ்ரீகிருஷ்ணா ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகை கடை ஆரம்பித்துள்ளார். இங்கு விற்கப்படும் நகைகளுக்கு செய்கூலி சேதாரம் இல்லை எனவும், நகை அடகு பிடிக்கப்படும் எனவும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை செய்துள்ளார்.

மேலும், தீபாவளி சீட்டு பிடித்து மளிகைப்பொருட்கள், தங்க காயின் மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதனையடுத்து, சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தீபாவளி சீட்டு கட்டியுள்ளனர். மேலும், சுமார் 500 சவரன் அளவிற்கு பொதுமக்கள் நகைகளை அடகு வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த தீபாவளியின்போது சீட்டு கட்டியவர்களுக்கு மளிகை பொருட்களை மட்டும் வழங்கிவிட்டு தங்க நாணயம் மற்றும் பணம் கொடுக்காமல் கடந்த 10 மாதங்களாக காலம் தாழ்த்தி வந்துள்ளார். பொதுமக்கள் நெருக்கடி கொடுத்ததையடுத்து தினேஷ்குமார் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குடும்பத்தை ராஜஸ்தான் மாநிலத்திற்கு ரகசியமாக அனுப்பி வைத்துள்ளார். மேலும், சந்தேகம் வராதநிலையில் கடையை தினமும் திறந்து வைத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் கடை திறக்காமல் இருப்பதை அறிந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு சென்றபோது, அவர் வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தீபாவளி சீட்டு கட்டிய 200க்கு மேற்பட்டோர் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் போலீசார், பொதுமக்களிடம் புகாரை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


Tags : Rajasthan , Jewelry tycoon, Rajasthan, public, struggle
× RELATED ராஜஸ்தானுக்கு 5வது வெற்றி: பஞ்சாப் கிங்ஸ் ஏமாற்றம்