×

2 டோசும் ஒரே தடுப்பூசியாக போடுவதை விட கோவிஷீல்டு, கோவாக்சின் கலந்து போட்டால் சிறந்த எதிர்ப்பு சக்தி: ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்

புதுடெல்லி: இரண்டு டோசையும்  ஒரே தடுப்பூசியாக போடுவதை விட கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளையும் ஒவ்வொரு டோஸ் என கலந்து போட்டால் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுவதாக ஐசிஎம்ஆர் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் என்ற தடுப்பூசியை தயாரித்து வருகிறது. இது, முழுக்க முழுக்க  உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்பட்டு வரும் முதல் தடுப்பூசியாகும். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம்-அஸ்ட்ராஜெனிகா கூட்டு கண்டுபிடிப்பான கோவிஷீல்டு  தடுப்பூசியை புனேவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதுதவிர, இந்தியாவில் ரஷ்யாவின் ஸ்புட்னிக்- வி, அமெரிக்காவின் மாடர்னா, ஜான்சன் அண்டு ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது, கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் மட்டுமே மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மாடர்னா, ஜான்சன் ஆகிய தடுப்பூசிக்கு அவசர பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. விரைவில், இந்த 2 தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. இதற்கிடையே, நாட்டில் சில இடங்களில் சுகாதாரத் துறை பணியாளர்களின் கவனக்குறைவால் முதல் மற்றும் இரண்டாம் டோஸ் தடுப்பூசிகள் மாற்றி செலுத்தப்பட்டது. குறிப்பாக, உத்தரபிரதேச மாநிலம், சித்தார்த் நகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், ஒரே கிராமத்தை சேர்ந்த 20 பேருக்கு முதல் டோஸ் கோவிஷீல்டும், 2வது டோசாக கோவாக்சினும் செலுத்தப்பட்டது.

இதில், 19 பேருக்கு உடல்நிலையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஒருவர் மட்டும், சில பிரச்னைகள் ஏற்பட்டதாக புகார் அளித்தார். இதேபோல், சில இடங்களிலும் தடுப்பூசிகள் மாற்றி செலுத்தப்பட்டது. இதனால், இதுதொடர்பான ஆய்வு நடத்தப்படும் என்று ஐசிஎம்ஆர் தெரிவித்திருந்தது. அதன்படி, சித்தார்த்நகர் மாவட்டத்தில் வெவ்வேறு தடுப்பூசி போட்ட 18 பேருக்கும், 2 டோசும் கோவிஷீல்டு போட்ட 40 பேர், 2 டோசும் கோவாக்சின் போட்ட 40 பேருக்கும் மே மாதம் முதல் ஜூன் வரை ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவுகளை இந்திய மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வெளியிட்டுள்ளது. அதில், இரண்டு டோசும் ஒரே தடுப்பூசி போடுவதை விட, கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் கலந்து போடப்பட்டவர்களுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை உருவாகி உள்ளது.

கோவிஷீல்டு, கோவாக்சின் கலவையுடன் கூடிய தடுப்பூசி பாதுகாப்பானது. ஆல்பா, பீட்டா மற்றும் டெல்டா வகை வைரஸ்களுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி உயர்ந்துள்ளது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.  

மாநில அரசுகளிடம் 2.42 கோடி டோஸ் கையிருப்பு
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய அரசு இதுவரை 52.37 கோடி தடுப்பூசிகளை வழங்கியுள்ளது. இதில், 50 கோடியே 32 லட்சத்து 77 ஆயிரத்து 942 டோஸ் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இன்னும், 2.42 கோடி டோஸ் கையிருப்பில் உள்ளது.

40 ஆயிரத்துக்கு கீழ் பாதிப்பு ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கை:
* நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 39,070 பேர் புதிதாக தொற்றால் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 17 லட்சத்து 34 ஆயிரத்து 455 ஆக உயர்ந்துள்ளது.  
* ஒரே நாளில் 491 பேர் பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 27 ஆயிரத்து 862 ஆக உயர்ந்துள்ளது.
* நாடு முழுவதும் வீட்டு தனிமை மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 6 ஆயிரத்து 822.

Tags : ICMR , Vaccine, Covshield, Covaxin, Immunity, ICMR
× RELATED ‘5 மாதத்தில் பயன்பாட்டுக்கு வருகிறது’;...