×

அக்காவின் மறைவு செய்தி கேட்டு திருச்சி ஏர்போர்ட்டில் கதறி அழுத ஒலிம்பிக் தடகள வீராங்கனை தனலட்சுமி

திருச்சி: ஜப்பான் தலைநகர் டோக்கியோ ஒலிம்பிக் 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்ட பந்தயத்தில் பங்கேற்க திருச்சி மாவட்டம் குண்டூரை சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமி(22) பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் இருந்து கடந்த மாதம் டோக்கியோவிற்கு சென்று இருந்தார். இந்நிலையில் தனலட்சுமியின் அக்கா கடந்த மாதம் 12ம்தேதி உடல் நலக்குறைவால் திடீரென  உயிரிழந்தார். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள தனலட்சுமியின் கவனம்  சிதறிவிடக்கூடாது என்பதற்காக அவரது குடும்பத்தினர் இந்த செய்தியை அவரிடம் தெரியப்படுத்தாமல் மறைத்து விட்டனர்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் இரவு தடகள வீராங்கனை தனலட்சுமி திருச்சி திரும்பினார். பதக்கம் எதுவும் கிடைக்கவில்லை எனினும் போட்டியில் பங்கேற்ற வீராங்கனை என்பதால் விமான நிலையத்தில் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அப்போது தனலட்சுமியிடம், அவரது அக்கா இறந்த தகவலை குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்த செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால் தனலட்சுமி துக்கம் தாங்காமல் விமான நிலையத்திலேயே தரையில் உட்கார்ந்து கதறி அழுதார். இது விமான நிலையத்தில் இருந்தவர்களையும் கண்கலங்க செய்தது.

தொடர்ந்து  அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் அவருக்கு ஆறுதல் கூறி வீட்டிற்கு  அழைத்து சென்றனர். இது குறித்து தனலட்சுமியின் தாய் உஷா கூறுகையில், எனது மூத்த மகள் காய்த்ரிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. இதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த மாதம் 12ம்தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

காய்த்ரி அவரது தங்கை தனலட்சுமி மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தாள். காயத்ரியும் படிப்பிலும், விளையாட்டிலும் எப்போதும் தங்கையை ஊக்கப்படுத்தி கொண்டே இருப்பார். அவரது இறப்பு செய்தியை உடனே தனலட்சுமிக்கு தெரிவித்தால் விளையாட்டில் கவனம் செலுத்த மாட்டார். நாங்கள் அருகில் இருந்தால்தான் அவரை தேற்ற முடியும். இதனால் தான் இறப்பு செய்தியை மறைத்து விட்டோம் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Tags : Olympic ,Thanalakshmi ,Trichy airport , Akka's funeral, Trichy Airport, Olympic athlete, Dhanalakshmi
× RELATED மல்யுத்தத்திற்கான தற்காலிக குழுவை...