×

வாகனங்கள், போலீஸ் தடுப்புகளை இடித்துவிட்டு சென்னைக்கு குட்கா கடத்த முயன்ற லாரியை விரட்டிப்பிடித்த போலீஸ்: பள்ளிகொண்டா அருகே அதிகாலையில் பரபரப்பு

வேலூர்: வாணியம்பாடியில் போலீஸ் தடுப்பை இடித்து தள்ளிவிட்டு குட்காவுடன் தப்பிய லாரியை போலீசார் சினிமா பாணியில் விரட்டி பள்ளிகொண்டா அருகே பிடித்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்தும், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்தும் தமிழகத்துக்கு தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா போன்ற புகையிலை பொருட்கள் சட்டவிரோதமாக லாரிகள், கார்கள், பஸ்கள் மூலம் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் இருந்து 2 மினி லாரிகள், ஒரு காரில் சென்னைக்கு குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், மாவட்ட எல்லையான நெக்குந்தியில் போலீசார் தடுப்புகளை வைத்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் வந்த 2 மினி லாரியும், ஒரு காரும் போலீசார் கை காட்டி நிறுத்தியும், நிற்காமல் போலீஸ் தடுப்புகளை இடித்து தள்ளிவிட்டு ஆம்பூர் நோக்கி வேகமாக சென்றன. டோல் பிளாசாவிலும் நிற்காமல் சென்றதால் அதிர்ச்சியடைந்த போலீசார் விரட்டிச் சென்றதுடன், வாணியம்பாடி, ஆம்பூர், பள்ளிகொண்டா என அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் அளித்தனர்.

இதையடுத்து அந்த வாகனங்களை அடுத்தடுத்த காவல் நிலையங்களை சேர்ந்த போலீசார் விரட்டினர். ஆனால் எதற்கும் அசராத லாரி மற்றும் கார் டிரைவர்கள், அவ்வழியாக சென்ற வாகனங்களில் சிலவற்றை இடித்து தள்ளிவிட்டு சென்றனர். பள்ளிகொண்டா டோல் பிளாசா அருகே போலீசார் வலுவான தடுப்புகளை அமைத்து அந்த வாகனங்களை மடக்கினர். இதில் கர்நாடகா பதிவெண் கொண்ட ஒரு லாரி மட்டும் சிக்கியது. மற்றொரு  லாரியும், காரும் போலீசில் சிக்காமல் வந்த வழியே வேகமாக திரும்பி சென்றன. அதை போலீசார் தொடர்ந்து விரட்டிச் சென்றனர்.

பிடிப்பட்ட லாரியில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், லாரி டிரைவர்கள் பெங்களூரு லால்பாக் பகுதியை சேர்ந்த ஆர்.முனியன்(35), ஏ.சந்திரசேகர்(41) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த மொபைல் போனில் பதிவாகியிருந்த தொலைபேசி எண்களை வைத்து கடத்தல் ஆசாமிகளை தேடுகின்றனர். இந்நிலையில் தப்பிய மற்றொரு லாரியையும் காரையும் கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திக்குப்பம் வனப்பகுதியில் நிறுத்திவிட்டு டிரைவர்கள் தப்பி சென்றனர். அவற்றையும் குட்காவுடன் போலீசார் பறிமுதல் செய்தனர். அதிகாலையில் சினிமா படங்களை மிஞ்சும் வகையில் நடந்த இந்த சேஸிங் வாணியம்பாடி தொடங்கி பள்ளிகொண்டா வரை தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Gutka ,Chennai ,Pallikonda , Vehicle, Police Detention, Gutka, Police
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...