×

வறுமையிலும் போராடி பதக்கங்கள் வென்ற மாற்றுதிறனாளி மாணவி போலந்து தடகள போட்டியில் தகுதியிருந்தும் வாய்ப்பு மறுப்பு: முதல்வரை சந்தித்து முறையிட முடிவு

களியக்காவிளை: போலந்து நாட்டில் இம்மாத இறுதியில் நடைபெறவிருக்கும் செவித்திறன் குறைபாடு கொண்டவர்களுக்கான  சர்வதேச தடகள போட்டியில் பங்கேற்பதற்கு தகுதி இருந்தும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனைக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக அவரது பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழக  முதல்வரை சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு பகுதியைச் சேர்ந்தவர் சமீஹா பர்வீன் (18). ஏழு வயதாக இருக்கும் போது ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக காது கேட்கும் திறனையும் பேசும் திறனையும் இழந்து விட்டார்.

இதற்காக சொந்த வீட்டைக் கூட விற்று சிகிச்சை அளித்துள்ளனர். தற்போது இக்குடும்பத்தினர் கடையாலுமூடு பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். முஜீப், ஓட்டலில் வேலை செய்கிறார். சமீஹா பர்வீனுக்கு தடகள விளையாட்டில் இருந்த ஆர்வத்தை அவரது ஆசிரியர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவருக்கு நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதலில் பயிற்சி அளிக்கப்பட்டது. சமீஹா பர்வீன் பங்கேற்ற பெரும்பாலான போட்டிகளில் வெற்றி பெற்று வந்தார். கடந்த 2017, 2018, 2019ல் நடைபெற்ற தேசிய தடகள போட்டிகளில் 9 தங்கம் உள்பட 12 பதக்கங்களை பெற்றுள்ளார்.

 இந்நிலையில் போலந்து நாட்டில் இம்மாத இறுதியில் நடைபெறவிருக்கும் சர்வதேச செவித்திறன் குன்றியவர்களுக்கான  (டெப் அத்லெட்டிக்ஸ்)  தடகளப் போட்டிகளில் பங்கேற்க சமீஹா பர்வீன் தேர்வாகியுள்ளார் என  தமிழ்நாடு டெப் அயோசியேசனில் இருந்து கடந்த ஜூலை 16ம் தேதி அவருக்கு கடிதம் வந்துள்ளது. அதில் டெல்லியில் ஜூலை 22ல் நடைபெறும் தகுதித் தேர்வில் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து சமீஹா பர்வீன் டெல்லிக்குச் சென்று தகுதித் தேர்வில் பங்கேற்று அதிக புள்ளிகள் பெற்று தகுதி பெற்றார். இதில் வேறு எந்த வீராங்கனைகளும் தேர்வாகவில்லை என்ற காரணத்தை கூறி சமீஹா பர்வீன் நிராகரிக்கப்பட்டுள்ளதாக இவரது பெற்றோர் புகார் கூறுகின்றனர். வாய்ப்பு மறுக்கப்பட்ட அன்றே இது குறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் புகார் அனுப்பியிருந்தனர்.

ஆனால் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் பதில் ஏதும் இல்லாததால், விரக்தியடைந்த இவர்கள் கடந்த இருதினங்களுக்கு முன் சென்னை புறப்பட்டு சென்றனர். மாநில விளையாட்டுத்துறை அமைச்சரை சந்தித்து மனு அளித்த சமீஹா பர்வீன், அமைச்சர் மனோதங்கராஜை சந்தித்து பேசினார். முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க முடிவு செய்துள்ளதாகவும், நிச்சயம் தான் அந்த போட்டியில் பாங்கேற்று தமிழகத்திற்கு பெருமை சேர்க்க உள்ளதாகவும் சமீஹா நம்பிக்கையுடன் கூறி உள்ளார்.

Tags : Poverty, medal, disabled student, athletic competition
× RELATED வேறு ஒருவருடன் கள்ள தொடர்பு...