காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை கர்நாடக அணைகளில் நீர்திறப்பு 21,000 கன அடியாக அதிகரிப்பு: இன்று காலை ஒகேனக்கல் வந்தடையும்

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை எதிரொலியாக, கர்நாடகா அணைகளிலிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் இன்று காலை ஒகேனக்கல் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து 21,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் இன்று காலை தமிழக- கர்நாடகா எல்லையான பிலிகுண்டலு வழியாக ஒகேனக்கல் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 இந்நிலையில், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில், நேற்று முன்தினம் 3,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 3,500 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 1,969 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 1,621 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 14,000 கனஅடி வீதமும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வரத்தை விட திறப்பு அதிகமாக இருப்பதால், அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 77.26 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 76.07 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 38.15 டிஎம்சியாக உள்ளது.

Related Stories:

>