×

தற்காலிக ஊழியர்கள் விவகாரம் கோ ஆப்டெக்ஸ் குறைந்த பட்ச ஊதியம் வழங்க ஒப்புதல்: கோஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்கத்துடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு

சென்னை: கோ-ஆப்டெக்ஸ் தலைமை அலுவலகத்தில், கோ-ஆப்டெக்ஸ் நிறுவன உயர் அதிகாரிகளுடன், கோ ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் பொதுச்செயலாளர் விஸ்வநாத், பொருளாளர் குமார், துணை தலைவர் பெருமாள் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, கோஆப்டெக்ஸ் சங்கம் சார்பில், பேச்சுவார்த்தையில் பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு நிலுவை தொகை வரும் செப்டம்பர் மாதம் 15ம்தேதிக்கு முன்பாக வழங்கப்படும். ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு நிலுவை தொகைகளை ஒரே தவணையில் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக வழங்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் வரை விற்பனை மற்றும் விற்பனை நிலைய பரப்பளவு அடிப்படையில் தற்காலிக பணியாளர்கள் வைத்து கொள்ள அனுமதிக்க வேண்டும். ஊழியர்களுக்கு வழங்கபட்ட சீருடை கைத்தறியில் வழங்க வேண்டும் உள்ளிட்ட 14 கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. இதையடுத்து கோஆப்டெக்ஸ் நிர்வாகம் சார்பில், விற்பனை பிரிவுக்கு வழங்கப்படும் பதவி உயர்வில் வழிவகை மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பரிசீலனைக்கு ஏற்று கொள்ளப்பட்டு பழைய நடைமுறையில் பதவி உயர்வு இம்மாத இறுதிக்குள் வழங்க ஏற்றுக்கொள்ளப்பட்டது. தற்காலிக பணியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நிர்ணயம் செய்த குறைந்தபட்ச ஊதியம் அந்தந்த மாவட்டத்தில் உள்ள விற்பனை நிலையங்கள் மற்றும் இதர பிரிவுக்கு இம்மாதம் முதல் வழங்க அறிவுறுத்தப்படும் என்று நிர்வாகத்தின் சார்பாக கூறப்பட்டது.

விற்பனை நிலையங்கள் மூடப்பட்டு அங்கிருந்த கவுண்டர் மற்றும் இதர பொருட்கள் சேமிப்பு கிடங்கில் உள்ளது. இவற்றில் கரையான்கள் உள்புகுந்து எதற்கும் உதவாத நிலையில் பகிர்வு சேமிப்பு கிடங்கில் உள்ள ஜவுளிகளுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்துடன் பணிபுரிந்து வருகின்றனர். உதாரணமாக சேலம் பகிர்வு சேமிப்பு கிடங்கில் உள்ள மர சாமான்களில் கரையான் புகுந்த புகைப்படம் பேச்சுவார்த்தையில் காண்பிக்கப்பட்டது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற கோரிக்ைககள் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Co-optex ,Co-optex Employees Union , Co-optex agrees to pay minimum wage: Cooptex agrees to negotiate with union
× RELATED வலங்கைமானில் மூடிக்கிடக்கும் கோஆப்டெக்சை மீண்டும் திறக்க வலியுறுத்தல்