×

பதக்கத்தை மில்கா சிங்கிற்கு அர்ப்பணிக்கிறேன்: கடின பயிற்சி, பலரின் ஆதரவால் சாதிக்க முடிந்தது..! `தங்கமகன்’ நீரஜ் சோப்ரா பேட்டி

மும்பை: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகள பிரிவு போட்டிகளில் ஈட்டி எறிதல் போட்டி நேற்று மாலை நடந்தது. இதில் இந்தியாவின் சார்பில் அரியானாவைச் சேர்ந்த 23 வயதான நீரஜ் சோப்ரா பங்கேற்றார். மொத்தம் 12 வீரர்கள் பங்கேற்ற இறுதிச்சுற்று, 6 சுற்றுகளாக நடத்தப்பட்டது. அதாவது மொத்தம் 6 வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. நீரஜ் சோப்ரா முதல் சுற்றில் 87.03 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்த நிலையில், இரண்டாம் சுற்றில் 87.58 மீட்டர் தூரம் வீசினார். 3, 4, 5வது சுற்றுகளில் நீரஜ் சோப்ராவால் பெரியளவில் சோபிக்க முடியவில்லை. ஃபௌல்களே மிஞ்சியது. இருப்பினும் 2வது சுற்றில் 87.58 மீட்டர் வீசியதால் நீரஜ் சோப்ரா தங்கம் சென்றார். இதன் மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் தடகளத்தில் முதல் தங்கப்பதக்கத்தை இந்தியா வசப்படுத்தியிருக்கிறது. சுதந்திரத்துக்கு பின்னர் தடகளத்தில் இந்தியர் ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

இந்த ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கம் கைப்பற்றி உள்ளது. ஒரு ஒலிம்பிக்கில் இந்தியாவின் மிகச்சிறந்த செயல்பாடு இதுதான். இதற்கு முன் 2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் 6 பதக்கம் வென்றதே (2 வெள்ளி, 4 வெண்கலம்) இந்தியாவின் சிறந்த செயல்பாடாக இருந்தது. இந்தியா 1900ம் ஆண்டு முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்று வருகிறது. ஆனால் தடகளத்தில் மட்டும் இந்தியாவுக்கு பதக்கம் இல்லாத வெற்றிடம் ஒரு நூற்றாண்டை கடந்த நிலையில், அந்த 121 ஆண்டு கால ஏக்கத்தை நீரஜ் சோப்ரா தணித்திருக்கிறார். தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுால் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட அனைத்து மாநில முதல்வர்கள், விளையாட்டு பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

வெற்றிக்கு பின் நீரஜ் சோப்ரா கூறியதாவது: சர்வதேச போட்டிகளில் நான் பங்கேற்றது டோக்கியோ ஒலிம்பிக்கில் மிகவும் உதவியாக இருந்தது. அதேபோல் ஒலிம்பிக்கில் விளையாடியபோது எந்த அழுத்தமும் இல்லாமல் என்னுடைய செயலில் கவனம் செலுத்த முடிந்தது. ஒலிம்பிக்கில் எந்த விளையாட்டும் ஒருநாள் நிகழ்வு அல்ல. கடின பயிற்சி பலரின் ஆதரவால் இந்த சாதனையை அடைய முடிந்தது. ஈட்டி எறிதலில் 90 மீட்டர் என்ற இலக்கை விரைவில் அடைவேன். இன்று 4வது முயற்சி தோல்வியில் முடிந்தாலும், நான் தங்கப் பதக்கத்தைப் பற்றி நினைக்கவில்லை. தனிப்பட்ட ரீதியாக இன்று எனது சிறப்பான ஆட்டத்தை வழங்குவேன் என்று நன்கு தெரியும். முதலில், எனது தங்கப் பதக்கத்தை மில்கா சிங்கிற்கு அர்ப்பணிக்கிறேன். அவர் இந்த நாளைப் பார்க்க ஆவலாக இருந்தார், அவர் இதை வானத்திலிருந்து பார்த்துக்கொண்டிருப்பார் என்று நான் நம்புகிறேன், என்றார்.


Tags : Milkha Singh ,`Thangamagan ,Neeraj Chopra , I dedicate the medal to Milkha Singh: hard training, achieved with the support of many ..! Interview with `Thangamagan 'Neeraj Chopra
× RELATED ஈட்டி எறிதலில் தங்கம், வெள்ளி