×

வெண்கலம் வென்ற ஹாக்கி அணியுடன் நீரஜ் சோப்ரா நாளை இந்தியா திரும்புகிறார்..!

புதுடெல்லி: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகள் நேற்றுடன் முடிந்தது. ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கான முதல் தங்கப் பதக்கத்தை நீரஜ் சோப்ரா வென்றுக் கொடுக்க, பஜ்ரங் புனியா ஆண்கள் ஃப்ரீஸ்டைல் ​​65 கிலோ பிரிவில் வெண்கலம் வென்றார். ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலப் பதக்கங்கள் உட்பட ஏழு பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. இதற்கு முன் 2012 லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, நாளை (திங்கள்கிழமை) மாலை 5 மணிக்கு இந்தியா திரும்புகிறார்.

வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியும் நாளை மாலை 5 மணிக்கு இந்தியா திரும்புகிறது. இவர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர்களுக்கான பாராட்டு விழா, நாளை மேஜர் தியான் சந்த் ஸ்டேடியத்தில் ஏற்பாடு செய்யப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், ‘ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும். இது தவிர, ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடர்புகொண்டு பேசுவார்’ என்றார்.


Tags : Niraj Chopra ,India , Neeraj Chopra returns to India tomorrow with the bronze winning hockey team ..!
× RELATED இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை