×

பெருந்தலைவர் காமராஜர், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உள்ளிட்ட தலைவர்களுடன் நெருக்கமாகப் பழகியவர்: ராமமூர்த்தியின் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி(84) உடல்நலக்குறைவால் காலமானார். மறைந்த திண்டிவனம் ராமமூர்த்தியின் உடல் சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள், தொண்டர்கள் மரியாதை செலுத்திட வைக்கப்பட்டு உள்ளது. திண்டிவனம் ராமமூர்த்தியின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திண்டிவனம் ராமமூர்த்தி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் திண்டிவனம் ராமமூர்த்தி மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், சட்டப்பேரவையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான திரு. திண்டிவனம் ராமமூர்த்தி அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த மன வருத்தத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். முதுபெரும் காங்கிரஸ் தலைவராக, தேசிய நீரோட்டத்தில் கலந்து- அக்கட்சியின் தேசிய அரசியல் தலைவர்கள் அனைவராலும் அறியப்பட்ட திரு. திண்டிவனம் ராமமூர்த்தி அவர்கள், மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றி தமிழ்நாட்டிற்கு பெரும் பெருமை சேர்த்தவர்.

மறைந்த பெருந்தலைவர் காமராஜர், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உள்ளிட்ட தலைவர்களுடன் நெருக்கமாகப் பழகியவர். தமிழ்நாட்டு நலனுக்காகவும்- உரிமைகளுக்காகவும் பாடுபட்டு- பொதுவாழ்வில் தனி முத்திரை பதித்த அவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர். திரு.திண்டிவனம் ராமமூர்த்தி அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும்- ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


Tags : Kamaraja ,Indira Gandhi ,Rajiv Gandhi ,Diocese of Ramamurti ,Q. ,Stalin , Close acquaintance with leaders including General Kamaraj, Indira Gandhi, Rajiv Gandhi: MK Stalin mourns Ramamoorthy's death
× RELATED மெட்ரோ ரயில் கட்டுமான பணி காரணமாக...