120 ஆண்டுகளுக்கு பின் தடகளத்தில் சாதனை தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா: ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா அசத்தல்

டோக்கியோ: ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் 120 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா தடகளத்தில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. ஆண்கள் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டி இன்றுடன் நிறைவடையும் நிலையில், இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு 7 பதக்கங்களை வென்று அசத்தியது.ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டித் தொடர், கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா பிரச்னை இன்னும் ஓயாத நிலையில், பல்வேறு போராட்டங்கள்  சர்ச்சைகளுக்கிடையே கடந்த மாதம் 23ம் தேதி ஒலிம்பிக் போட்டி கோலாகலமாகத் தொடங்கியது.

தொடக்கத்திலேயே பளுதூக்குதலில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி வென்று பதக்க வேட்டைக்கு பிள்ளையார் சுழி போட்டார். இதனால் இந்தியா அதிக அளவில் பதக்கங்களை அள்ளும் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், வில்வித்தை மற்றும் துப்பாக்கிசுடுதலில் முன்னணி வீரர், வீராங்கனைகள் அடுத்தடுத்து வெளியேறியதால் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.மகளிர் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவில் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்று ஆறுதல் அளித்தார். குத்துச்சண்டையில் லவ்லினா போர்கோஹெய்ன் வெண்கலம் வென்ற நிலையில், ஹாக்கியில் இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் அணிகள் அபாரமாக செயல்பட்டு அரையிறுதி வரை முன்னேறி நம்பிக்கை அளித்தன. ஆனால், இரு அணிகளும் அரையிறுதியில் போராடி தோற்றதால் 3வது இடத்துக்கு போட்டியிட்டன. ஆண்கள் ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தது. ஆனால், மகளிர் ஹாக்கி அரையிறுதியில் களமிறங்கிய இந்தியா 3-4 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் கடுமையாகப் போராடி தோற்றது.

மல்யுத்தத்தில் ரவிகுமார் தாஹியா இந்தியாவுக்கு 4வது பதக்கத்தை கைப்பற்றிய நிலையில் (வெள்ளி), நேற்று மகளிர் கோல்ப் போட்டியில் அதிதி அஷோக், ஆண்கள் மல்யுத்தத்தில் பஜ்ரங் புனியா, ஆண்கள் ஈட்டி எறிதலில் நீரஜ் ஆகியோர் பதக்கம் வெல்லும் முனைப்புடன் களமிறங்கினர். மகளிர் கோல்ப் தனிநபர் ஸ்ட்ரோக் பிளே பிரிவு 4வது சுற்றில் அதிதி 4வது இடம் பிடித்து நூலிழையில் பதக்க வாய்ப்பை இழந்தார். அடுத்து ஆண்கள் மல்யுத்தம் 65 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் 3வது இடத்துக்காக கஜகஸ்தான் வீரர் தவுலத்துடன் மோதிய பஜ்ரங் 8-0 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்று வெண்கலப் பதக்கத்தை முத்தமிட்டார். இதனால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 6 ஆக அதிகரித்தது.நம்பிக்கை நட்சத்திரம் நீரஜ்: டோக்கியோ ஒலிம்பிக்சில் இந்தியாவுக்கு ஒரு தங்கப் பதக்கமாவது கிடைக்காதா என்ற ஏக்கப் பெருமூச்சுக்கு விடை கொடுக்கும் கடைசி நம்பிக்கையாக, ஆண்கள் ஈட்டி எறிதல் பைனலில் நீரஜ் சோப்ரா கடும் நெருக்கடியுடன் பங்கேற்றார். தகுதிச் சுற்றில் அவர் முதலிடம் பிடித்திருந்ததால் நிச்சயம் பதக்கம் வெல்வார் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. அது தங்கமாக இருக்க வேண்டும் என்பதே 130 கோடி இந்தியர்களின் பிரார்த்தனையாக இருந்தது.

மொத்தம் 12 வீரர்கள் இறுதிச்சுற்றில் களமிறங்கினர். அரியானா மாநிலம் பானிப்பட்டை சேர்ந்த ராணுவ சுபேதாரானா நீரஜ் சோப்ரா (23 வயது) தனது முதல் வாய்ப்பில் 87.03 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து நம்பிக்கை அளித்தார். மற்ற வீரர்கள் அவரை விட பின்தங்கி இருந்ததால் தங்கப் பதக்கத்துக்கான வாய்ப்பு பிரகாசமானது. இரண்டாவது வாய்ப்பில் அவர் இன்னும் சிறப்பாக செயல்பட்டு 87.58 மீட்டர் தூரத்துக்கு எறிந்து முதலிடத்தை உறுதியாக தக்கவைத்தார். 3வது வாய்ப்பில் 76.79 மீட்டர் எறிந்த நீரஜ், 4வது மற்றும் 5வது வாய்ப்பில் தவறிழைத்தார். எனினும், மற்ற போட்டியாளர்களால் அவரை நெருங்க முடியவில்லை. நீரஜ் தனது 6வது வாய்ப்பை பயன்படுத்துவதற்கு முன்பாகவே அவர் தங்கம் வெல்வது உறுதியாகிவிட, நாடு முழுவதும் டிவி நேரடி ஒளிபரப்பில் இப்போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியுடன் இந்த வெற்றியைக் கொண்டாடினர். கடைசி முயற்சியில் அவர் 84.24 மீட்டர் தூரத்துக்கு எறிந்தார். நீரஜ் தனது 2வது முயற்சியில் எட்டிய 87.58 மீட்டர், ஒலிம்பிக் வரலாற்றில் 120 ஆண்டுகளுக்குப் பிறகு தடகள போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தது. செக் குடியரசின் ஜேக்கப் வாட்லெச் (86.67 மீ.) வெள்ளிப் பதக்கமும், வெஸ்லி விடெஸ்லாவ் (85.44 மீ.) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

கொண்டாட்டம்: போட்டி முடிவதற்கு ஒரு நாள் முன்பாக இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்த ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன. நீரஜ் ராணுவ வீரர் என்பதால், ராணுவ வீரர்கள் வாத்தியங்களை முழங்கி வாழ்த்து கோஷமிட்டு இந்த வெற்றியை கொண்டாடினர். அரியானாவில் அவரது சொந்த ஊரில் மக்கள் தெருக்களில் திரண்டு இனிப்புகளை வழங்கியும் ஒருவருக்கொருவர் கை குலுக்கியும் இதை தங்கள் வெற்றியாகவே கொண்டாடி மகிழ்ந்தனர்.வாழ்த்து மழை: ஒலிம்பிக்கில் மகத்தான சாதனை படைத்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 6 கோடி பரிசு: நீரஜின் வெற்றியை பாராட்டும் வகையில் அரியானா மாநில அரசு ₹6 கோடி ரொக்கப் பரிசு அறிவித்துள்ளது.

* 1900, பாரிஸ் ஒலிம்பிக்சில் இந்தியா சார்பில் களமிறங்கிய நார்மன் பிரிட்சார்ட் 200 மீட்டர் ஓட்டம் மற்றும் 200 மீட்டர் தடை தாண்டி ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கங்கள் வென்றார். அதன் பிறகு நீரஜ் சோப்ரா வென்ற தங்கமே இந்தியாவுக்கு ஒலிம்பிக் தடகளத்தில் கிடைத்த முதல் பதக்கமாகும்.

* நீரஜ் இந்திய ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றி வருகிறார்.

நீரஜ் 11வயது சிறுவனாக இருந்தபோது மிகவும் குண்டாக இருந்ததால் (80 கிலோ) எடையை குறைப்பதற்காக ஓட்டப் பயிற்சி மேற்கொண்டார். கிராமத்தில் இருந்து பேருந்தில் 17 கி.மீ. பயணம் செய்து பானிப்பட் ஸ்டேடியத்துக்கு சென்று வர 30 ரூபாய்தான் கொடுப்பார்களாம். அதில் ஒரு கிளாஸ் பழச்சாறு கூட வாங்க முடியாமல் திணறி இருக்கிறார். ஓட்டப் பயிற்சி பிடிக்காமல் விரக்தியுடன் இருந்த நீரஜ், மூத்த வீரர் ஜெய்வீரின் ஈட்டி எறிதல் பயிற்சியை ஆர்வமாகப் பார்த்து வந்துள்ளார். ஜெய்வீரின் வழிகாட்டுதலுடன் ஒரு சிறுவனாக ஈட்டியை பிடித்த அவர் இன்று இந்தியாவுக்காக தங்கப் பதக்கத்தை வென்று சாதித்துள்ளார்.

* ஏழ்மையான விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர் நீரஜ். அவரது கூட்டுக்குடும்பத்தில் மொத்தம் 17 பேர். 2012ல் லக்னோவில் நடந்த தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் புதிய தேசிய சாதனையுடன் தங்கம் வென்ற அவரது பயணம் டோக்கியோ ஒலிம்பிக்சிலும் தங்க மயமாக ஜொலிக்கிறது.

* ஒலிம்பிக் தனிநபர் போட்டியில் தங்கம் வென்ற 2வது இந்தியர் என்ற பெருமையும் நீரஜுக்கு கிடைத்துள்ளது. 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்சில் அபினவ் பிந்த்ரா ஆண்கள் துப்பாக்கிசுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்றதற்குப் பிறகு தற்போது ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

Related Stories:

More
>