×

ஏழுமலையான் நைவேத்திய பிரசாதத்திற்கு பசும்பால்தான் பயன்படுத்தப்படும்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தான சிறப்பு அதிகார குழு கூட்டம் தலைவர் ஜவகர் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்குப்பின் ஜவகர் நிருபர்களிடம் கூறியதாவது:  திருமலையில் காற்று மாசு அடைவதை தடுக்கும் விதமாக பசுமை எரிசக்தி திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. இதற்காக முதற்கட்டமாக தனியார் நிறுவனத்தின் தயாரிப்பான மின்சாரத்தில் இயங்கும் 35 என்எக்ஸ் வாகனங்கள் வாங்கப்பட்டு போக்குவரத்திற்கு வழங்கப்படும்.  ஏழுமலையான் நைவேத்திய பிரசாதத்திற்காக நாட்டு மாட்டு பசும்பால் பயன்படுத்தப்பட உள்ளது. 25 நாட்டு மாடுகள் பக்தர்கள் நன்கொடையாக வழங்கி உள்ளனர். அவை விரைவில் திருமலைக்கு கொண்டு வரப்படும். சுவாமி பிரசாதத்திற்கு 30 கிலோ நெய் தேவை.

இதற்கு 250 முதல் 300 மாடுகள் தேவை. ஏழுமலைகளை பிரதிபலிக்கும் வகையில் ஏழு வகையான தேசியவகை நாட்டு மாடுகள் இதற்காக பயன்படுத்தப்பட உள்ளது. இந்த மாட்டின் மூலம் வரும் பாலில் நெய் தயாரித்து பயன்படுத்தப்படும். சுவாமிக்கு தீபாராதனைக்கு பயன்படுத்த பக்தர்கள் நாட்டு மாட்டு நெய் தானமாக வழங்கலாம். சுவாமிக்கு பயன்படுத்தபட்ட மலர்களை கொண்டு தயார் செய்யப்பட்ட ஊதுபத்திகள் ஆகஸ்ட் 15ம் தேதி பக்தர்களுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும். தமிழ்நாட்டில் 15 வகையான பஞ்சகவ்யா பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை நான்கு மாதங்களில் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இந்த ஆண்டு நடைபெற உள்ள பிரமோற்சவத்தில் பக்தர்களை அனுமதிப்பதா? இல்லையா? என்பது குறித்து விரைவில் முடிவு எடுத்து அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Only cow's milk will be used for the Ezhumalayan Naivedhiya offering: Tirupati Devasthanam announcement
× RELATED இந்தோனேஷியாவில் பலமுறை வெடித்து சிதறிய எரிமலை