போனில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்த போது ‘ப்ளூடூத்’ இயர்போன் வெடித்து இளைஞர் பலி: ராஜஸ்தானில் பரிதாபம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் செல்போனில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்த இளைஞரின் ‘ப்ளூடூத்’ இயர்போன் வெடித்ததால் பரிதாபமாக உயிரிழந்தார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அடுத்த உதய்புரியா கிராமத்தை சேர்ந்த ராகேஷ் (28) என்பவர் தனது மொபைல் போனில் சினிமா பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் தனது மொபைலில் ‘ப்ளூடூத்’ இணைத்திருந்தார். இரண்டு காதுகளிலும் ‘புளூடூத்’ இயர்போன்களை பொருத்தியிருந்தார். திடீரென காதில் பொருத்தப்பட்டிருந்த இரண்டு இயர்போன்களும் வெடித்தன.

அதிர்ச்சியடைந்த ராகேஷின் இரு காதுகளிலிருந்தும் ரத்தம் வரத் தொடங்கியது. இதைப் பார்த்த அவர், சிறிது நேரத்தில் அப்படியே கீழே மயங்கி விழுந்தார். அதன் பிறகு அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு ராகேஷை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் இறந்துவிட்டதாக அறிவித்தார். இதுகுறித்து ராகேஷின் உறவினர்கள் கூறுகையில், ‘ராகேஷ் அடிக்கடி செல்போனில் இயர்போன்களை பொருத்திக் கொண்டு பேசுவார்; பாடல்களை கேட்டு வருவார்.

அதனால், புளூடூத் இயர்போன் வெடித்ததில் ஏற்பட்ட அதிர்ச்சியில் இறந்திருக்கலாம்’ என்றனர். இதுகுறித்து ராகேஷை பரிசோதித்த டாக்டர் எல்என் ருண்ட்லா கூறுகையில், ‘செல்போனின் ‘ப்ளூடூத்’ இயர்போன்கள் வெடித்தபோது, ​​பலத்த சத்தம் கேட்டிருக்க வாய்ப்புள்ளது. அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் ராகேஷூக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம். மொபைல் போன் பயன்படுத்துவோர் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆபத்திலிருந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டுமானால், இயர்போன்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்’ என்றார்.

Related Stories:

>