×

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்: ஆடவர் மல்யுத்த போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார் பஜ்ரங் புனியா

டோக்கியோ: ஆடவர் மல்யுத்தம் 65 கிலோ எடை பிரிவில் பஜ்ரங் புனியா இந்தியாவிற்குகாக வெண்கல பதக்கம் வென்றுள்ளார். வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் கஸகஸ்தான் வீரரை வீழ்த்தினார். கஜகஸ்தான் வீரர் டவுலெட் நியாஸ்பெகோவை 8 - 0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி பஜ்ரங் புனியா பதக்கம் வென்றார்.

டோக்கியோ ஒலிம்பிக்ஸில் ஆடவர் மல்யுத்தம் 65 கிலோ எடை பிரிவின் அரையிறுதியில் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே களமிறங்கிய இந்திய வீரர் பஜ்ரங் புனியா போராடி தோற்றார்.  முதல் சுற்றில் கிர்கிஸ்தான் வீரர் எர்நாசர் அக்மடாலிவை எதிர்கொண்ட பஜ்ரங்,  முதல் பகுதியில் 3-1 என முன்னிலை பெற்றார். 2வது பகுதியில் 3-3 என சமநிலை ஏற்பட்டாலும், பஜ்ரங் போட்ட கிடுக்கிப்பிடியில்  சிக்கி  எர்நாசர் வீழ்ந்தார்.

அடுத்து பஜ்ரங் காலிறுதியில் ஈரான் வீரர் செகா மோர்டசாவுடன் மோதினார். அதன் முதல் பகுதியில்  1-0 என்ற புள்ளி கணக்கில் செகா முன்னிலை பெற்றார். ஆனால் 2வது பாதியில் பஜ்ரங் 2-1 என முன்னிலைக்கு வந்தார். கூடவே செகாவை உடும்புப்பிடியாய் பிடித்து வீழ்த்திய பஜ்ரங் எழுந்துகொள்ள முடியாமல் செய்து அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

அரையிறுதியில் அஜர்பைஜான் வீரர்  ஹாஜி அலியேவுடன் மோதினார். அடுத்தடுத்து கிடுக்குப்பிடிகள் போட்டு ஹாஜி முதல் பகுதியில் 4-1 என்ற கணக்கில் முந்தினார்.  மேலும் 2வது பகுதியில் அதே நிலைமை தொடர்ந்தது. அப்போது ஹாஜி விதிகளை மீறி விளையாடுகிறார் என்று பஜ்ரங் முறையீடு செய்தார்.  ஆய்வின் முடிவில் அது நிராகரிக்கப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்த ஆட்டத்தில்  ஹாஜி 12-5 என்ற புள்ளி கணக்கில் வென்று பைனலுக்கு முன்னேறினார்.

இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில்கஜகஸ்தான் வீரர் டவுலெட்  நியாஸ்பெகோவை எதிர்த்து பஜ்ரங் களமிறங்கினார். இந்த போட்டியில் டவுலெட் நியாஸ்பெகோவை 8 - 0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி பஜ்ரங் புனியா வெண்கலப் பதக்கம் வென்றார்.

Tags : India ,Tokyo Olympics ,Bajrang Punia , Olympic, Men's Wrestling, Bronze Medal, Bajrang Punia
× RELATED இந்திய மக்களின் குரல் அதுவே தேர்தல்...