×

காஞ்சிபுரம் லாரியை வழிமறித்து ரூ.6 கோடி செல்போன்கள் கொள்ளை: கர்நாடக எல்லையில் கும்பல் கைவரிசை

ஓசூர்: ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையில் டிரைவரை தாக்கி ரூ.6 கோடி மதிப்புள்ள செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த சம்பவத்தில் ஈடுபட்டது வட மாநில கொள்ளை கும்பலா? என்ற கோணத்தில் கர்நாடக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரத்தில் செல்போன்கள் தயாரிக்கக் கூடிய தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கிருந்து நேற்று ரூ.6 கோடி மதிப்புள்ள செல்போன்களை ஏற்றிக் கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று கர்நாடக மாநிலம் ெபங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி கர்நாடக மாநில எல்லைப்பகுதியான முள்பாகல் பக்கமாக தேவராயசமுத்ரா என்ற இடத்தில் நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அப்போது, ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஒரு கும்பல் லாரியை வழிமறித்தது. அவர்கள் டிரைவர் மற்றும் கிளீனரை தாக்கி கீழே தள்ளி, லாரியிலிருந்த செல்போன்களை கொள்ளையடித்துச் சென்றனர். இந்நிலையில் காயத்துடன் லாரி டிரைவர், கிளீனர் கிடந்ததை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து கோலார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து, லாரி கடத்தப்பட்ட நேரத்தில் அந்த பகுதியில் சென்ற வாகனங்கள், அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கடந்த அக்டோபர் மாதம் ரூ.15 கோடி மதிப்புள்ள செல்போன்களை ஏற்றிச் சென்ற லாரி டிரைவரை வடமாநில கும்பல் தாக்கி செல்போன்களை கொள்ளையடித்து சென்றது. சுமார் ஒரு மாதம் ஓசூர் போலீசார் மத்திய பிரதேசம், உத்தரபிரதேச மாநிலங்களில் முகாமிட்டு கொள்ளையர்கள் 10 பேரை கைது செய்தனர். ஆனாலும் செல்போன்களை கடத்திய முக்கிய குற்றவாளிகள், அதை வங்கதேசத்தில் விற்பனைக்காக கொண்டு சென்றுவிட்டனர். அதே கும்பல் ஆந்திர மாநிலத்திலும் நகரி உள்பட பல்வேறு இடங்களிலும் பல கோடி மதிப்புள்ள செல்போன்களை கொள்ளையடித்து சென்றனர். தற்போதும் அதேபோல கொள்ளை நடந்துள்ளதால், இந்த செல்போன் கொள்ளையிலும் வட மாநில கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் கர்நாடக மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Kansipuri ,Karnataka , Rs 6 crore cell phone hijacked in Kanchipuram
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...