நெமிலி அருகே மதில் சுவர் இல்லாததால் மதுஅருந்துபவர்களின் கூடாரமாக மாறிய அரசு பள்ளி: நடவடிக்கை எடுக்க மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை

நெமிலி:  நெமிலி அருகே சுவர் இல்லாததால் மதுஅருந்துபவர்களின் கூடாரமாக அரசு பள்ளி மாறியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். நெமிலி அடுத்த புன்னை பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில்  130க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் மூன்று கட்டிடங்கள்  உள்ளது. இதில் தலைமை ஆசிரியர் அறை மற்றும் புதியதாக வகுப்பறை ஒன்று கட்டப்பட்டது.

இந்த புதிய கட்டிடம் கட்டும் பணிக்காக பள்ளியின் மதில் சுவர் இடிக்கப்பட்டது. ஆனால், இடிக்கப்பட்ட மதில் சுவர் மீண்டும் கட்டவில்லை. இந்நிலையில், இப்பள்ளி மதில் சுவர் இடிக்கப்பட்டதால் இதனை பயன்படுத்தி கொண்ட குடிமகன்கள் பகல், இரவு பாராமல்  பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து குடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே வீசி வருகின்றனர்.  பள்ளி விடுமுறையில் உள்ள நிலையில் மாணவர் சேர்க்கை தற்போது நடந்து வருகிறது.  அவ்வாறு மாணவர்களை பள்ளிக்கு சேர்க்க வரும் பெற்றோர்கள் வளாகத்தில் மதுபாட்டில்கள் வீசப்பட்டுள்ளதை முகம் சுழித்தபடி வேதனையுடன் பார்த்து செல்கின்றனர்.

தினந்தோறும் ஆசிரியர்கள் பள்ளியை சுத்தம் செய்து வந்தாலும், தினமும் பள்ளி திறந்தால் வளாகத்தில் ஆங்காங்கே குடிமகன்கள் குடித்துவிட்டு வீசிச்செல்லும் மதுபாட்டில்கள் உள்ளது. இதனால் ஆசிரியர்கள் பெரும் வேதனைக்குள்ளாகி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளி வளாகத்துக்குள் குடிமகன்கள் நுழையாதவாறு பள்ளியை சுற்றி மதில் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், போலீசார் அவ்வப்போது பள்ளி பகுதியில் ரோந்து சென்று பள்ளி வளாகத்துக்குள் மதுகுடிப்பவர்களை கண்டறிந்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளி அருகே 2 டாஸ்மாக்

புன்னை ஊராட்சி பள்ளி அருகே 2 டாஸ்மாக் கடைகள் உள்ளது. பள்ளி அருகே இருக்கும் இந்த 2 டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். ஆனால், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தநிலையில் தான் பள்ளி வளாகம் குடிமகன்கள் கூடாரமாக கடந்த சில மாதங்களாக காட்சியளித்து வருகிறது. இனிமேலாவது பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: