மேட்டூர் மேற்குக்கரையின் பாசன வாய்க்கால் சுரங்க நீர்வழிப்பாதையில் தேங்கிய கழிவுகள் அகற்றம்

பவானி: மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்குக் கரை பாசனத்துக்கு கடந்த 1-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் மேற்குக் கரை வாய்க்காலில் விநாடிக்கு 200 கன அடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர் சுமார் 24 மைல் தொலைவுக்கு சென்றடைந்தபோது, குறிச்சி பகுதியில் வாய்க்காலில் குறுக்கே சுமார் 600 மீட்டர் தொலைவுக்கு தரைக்கடியில் தண்ணீர் சென்று மற்றொரு பகுதியில் வெளியேறும் வகையில் உள்ள சுரங்க நீர்வழிப்பாதையில் கடந்த 3-ம் தேதி இரவு அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தண்ணீர் செல்லாமல் வாய்க்காலின் கரைகளை மேவிச் சென்றது.

இதுகுறித்து, அப்பகுதியினர் பொதுப்பணித் துறையினருக்கு தெரிவித்த தகவலின்பேரில், வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு, அடைப்பினை அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டது.மேட்டூர் அணை செயற்பொறியாளர் தேவராஜன், உதவி பொறியாளர் டி.சுப்பிரமணியன், அம்மாபேட்டை உதவிப் பொறியாளர் சாமிநாதன் மேற்பார்வையில் ஊழியர்கள் 20-க்கும் மேற்பட்டோர் 2 ராட்சத இயந்திரங்களுடன் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டனர். தரைக்கடியில் செல்லும் நீர்வழிப்பாதையில் உள்ள 2 காற்று போக்கிகளில் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

கற்கள், மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள், முள், வேளாண் கழிவுகள் அடைத்திருந்ததால், தண்ணீர் வெளியே செல்லாமல் தேங்கியது தெரியவந்தது. இதையடுத்து, சுரங்கப்பாதையில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு, தொழிலாளர்கள் கழிவுகளை அகற்றும் பணியில் கடந்த 3 நாட்களாக ஈடுபட்டனர். இப்பணிகள் இன்று நிறைவடைந்து விடும் எனவும், பாசனத்துக்கு மீண்டும் தண்ணீர் திறக்கப்படும் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>