வண்டலூர் தாலுகாவில் புதிய ரேஷன் கார்டு வினியோகம்: வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ வழங்கினார்

கூடுவாஞ்சேரி: வண்டலூர் தாலுகாவில், 300 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகளை வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ வழங்கினார்.  செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் தாலுகாவில் கூடுவாஞ்சேரி, வண்டலூர், மாம்பாக்கம் ஆகிய குரு வட்டங்கள் உள்ளன. இதில், 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடந்த மாதம் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தனர்.  இதற்கிடையில், ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த 10 நாட்களுக்குள் புதிய ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், வண்டலூர் தாலுகா அலுவலகம் மற்றும் கூடுவாஞ்சேரியில் உள்ள அரசு பயணியர் விடுதி வளாகத்தில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் விழா நேற்று நடந்தது.

வண்டலூர் தாசில்தார் ஆறுமுகம் தலைமை தாங்கினார். துணை தாசில்தார் ஏழுமலை, வட்ட வழங்கல் அலுவலர் அப்துல்ராசிக், வருவாய் ஆய்வாளர்கள் ரங்கன், முருகேசன், வசந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  விஏஓ தணிகாசலம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராமுதன் ஆகியோர் கலந்துகொண்டு 300 பேருக்கு புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை வழங்கினர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக், ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர்கள் ஆப்பூர் சந்தானம், கே.எஸ்.ரவி, குணசேகரன், பேரூர் செயலாளர் வக்கீல் ஜி.கே.லோகநாதன், நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஜான்தினகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஊரப்பாக்கம் ஊராட்சி செயலர் கருணாகரன் நன்றி கூறினார்.

Related Stories: