×

விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலை ஆரம்பித்த சட்டத்தை ரத்து செய்ய முடிவு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: விழுப்புரத்தில் தொடங்கப்பட்டுள்ள டாக்டர் ஜெ.ஜெயலலிதா  பல்கலைக்கழகத்தை உருவாக்கிய சட்டத்தை ரத்து செய்யப்போவதாக சென்னை உயர்  நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. விழுப்புரம்,  கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மாணவர்கள் நலனுக்காக வேலூர் திருவள்ளுவர்  பல்கலைக்கழகத்தை பிரித்து விழுப்புரத்தை தலையிடமாக கொண்டு டாக்டர்  ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் முந்தைய அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்டது.  இந்த பல்கலைக்கழகத்துக்கு நிதி ஒதுக்க கோரியும், பதிவாளரை நியமிக்க  கோரியும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், சென்னை உயர் நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்திருந்தார்.  

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி  ஆதிகேசவலு அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல்  ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, சமீபத்தில் அரசின் கட்டுப்பாட்டில்  எடுக்கப்பட்ட அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு கல்லூரி இணைப்பு அதிகாரம்  வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரவும், ஜெயலலிதா பல்கலைக்கழக  சட்டத்தை ரத்து செய்யவும் அரசு முடிவு செய்துள்ளதாக கூறி அதுதொடர்பான  அரசாணையை தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  விழுப்புரத்தில் டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அமைக்க வகை செய்யும்  சட்டத்தை ரத்து செய்யப்போவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு  சட்டத்தை இயற்ற சட்டப்பேரவைக்கு எந்த அதிகாரம் உள்ளதோ அதே அதிகாரத்தை  பயன்படுத்தி அந்த சட்டத்தை ரத்து செய்ய முடியும். அதன் அடிப்படையில்  விழுப்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை உருவாக்கிய  சட்டத்தை ரத்து செய்ய அரசு முடிவெடுத்துள்ளது.

ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழக  சட்டத்தை ரத்து செய்ய அரசுக்கு அதிகாரம் உள்ள போதும் அதுவரை அச்சட்டம்  அமலில் இருக்கும் என்பதால் அச்சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும். எனவே,  திருவள்ளுவர் பல்கலைக்கழகம் விழுப்புரம் மையத்தின் மூலம் முதுநிலை மாணவர்  சேர்க்கை தொடர்பான அறிவிப்பை வெளியிட அதிகாரமில்லை. அந்த அறிவிப்பு ரத்து  செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டு முன்னாள் அமைச்சர் சண்முகத்தின் வழக்கை  முடித்து வைத்தனர்.

Tags : Jayalalithaa University ,Villupuram ,Government of Tamil Nadu ,Court , High Court, Government of Tamil Nadu, Information
× RELATED கோடை காலம் துவங்கிய நிலையில்...