×

அதிபர் பைடன் நிர்வாகம் அலட்சியம்: 1 லட்சம் கிரீன் கார்டுகள் வீணாகும்: அமெரிக்க வாழ் இந்தியர்கள் கவலை

வாஷிங்டன்: அமெரிக்காவில் இன்னும் 2 மாதங்களில் வேலைவாய்ப்பு அடிப்படையிலான ஒரு லட்சம் கிரீன் கார்டுகள் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.  அமெரிக்காவில் எச்-1பி விசாவின் கீழ் பணி புரியும் ஆயிரக்கணக்கானோர் நிரந்தர குடியுரிமை இன்றி தவித்து வருகின்றனர். இவர்கள் நிரந்தர குடியுரிமைக்கான கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்து பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். அமெரிக்க அரசு ஒவ்வொரு ஆண்டும் 1,40,000 பேருக்கு வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டு ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்தாண்டு, முன்பு எப்போதும் இல்லாத வகையில் 2,61,500 பேருக்கு வேலைவாய்ப்பு அடிப்படையிலான நிரந்தர குடியுரிமை வழங்க ஒதுக்கீடு செய்துள்ளது. ஆனால், இந்தாண்டு ஒரு லட்சம் கிரீன் கார்டுகள் பயன்படுத்தப்படாமல் வீணாக்கப்பட இருப்பதாக அமெரிக்க குடியமர்வு சேவை துறையின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்திய ஐடி நிபுணர் சந்தீப் பவார் தெரிவிக்கையில், `அமெரிக்காவில் அக்டோபர் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை நிதியாண்டாக கணக்கிடப்படுகிறது. எதிர்பாராத விதமாக, சட்டப்படி இந்த விசாக்கள் வரும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் பயன்படுத்த முடியாமல் போனால், அவை வீணாக போய் விடும். சட்டப்படி எச்1-பி விசாவில் தங்கி வேலைபார்க்கும் ஆயிரக்கணக்கானோரில் பலர் இதன் மூலம் நிரந்தர குடியுரிமை பெற முடியும். ஆனால், போதிய விசாக்கள் இருந்தும் பைடன் நிர்வாகம் அதை பயன்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டுவதால், ஒரு லட்சம் கிரீன் கார்டுகள் பயன்படுத்தப்படாமல் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது,’ என்று கூறினார்.

125 பேர் வழக்கு
ஒரு லட்சம் கிரீன் கார்டுகள் வீணாவதை தடுக்க, அதிபர் பைடனின் நிர்வாகத்தை எதிர்த்து, இந்தியர்கள், சீனர்கள் உள்பட 125 பேர் கொண்ட குழு, அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இது விரைவில் விசாரணைக்கு வருகிறது.

Tags : President Biden ,American ,Indians , President Biden, American Indians
× RELATED காங்கிரசின் வங்கிக் கணக்குகள்...