×

பாகிஸ்தானில் கோயில் தாக்கப்பட்ட நிலையில் ஆப்கான் குருத்வாராவில் சீக்கிய மத கொடி அகற்றம்: தலிபான் தீவிரவாதிகள் அட்டகாசம்

காபூல்: பாகிஸ்தானில் இந்து கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் ஏற்பட்ட பதற்றம் ஓய்வதற்குள், ஆப்கானிஸ்தானில் குருத்வாராவில் அமைக்கப்பட்டு இருந்த சீக்கிய மத கொடியை தலிபான்கள் அகற்றி உள்ளனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பழமை வாய்ந்த கோயில் மீது நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தி, சிலைகளை உடைத்தனர். இதற்கு ஒன்றிய அரசு கடும் எதிர்ப்பு  தெரிவித்தது மட்டுமின்றி, இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரக உயரதிகாரியையும் அழைத்து கண்டனம் தெரிவித்தது. இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும்படி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தால் ஏற்பட்ட பதற்றம் ஓய்வதற்குள், ஆப்கானிஸ்தானில் பக்சியா மாகாணத்தில் உள்ள சம்கனி என்ற இடத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த தலா சாகிப் குருத்வாராவில் வைக்கப்பட்டு இருந்த சீக்கியவர்களின் புனித கொடியை தலிபான் தீவிரவாத அமைப்பு அகற்றியுள்ளது. இந்த சம்பவத்துக்கும் ஒன்றிய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நாட்டில் வசித்து வரும் சீக்கிய சமூகத்தின் தலைவரான நெதன் சிங்கை தலிபான் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளனர். அவரை விடுவிக்கும்படியும் ஒன்றிய அரசு வலியுறுத்தி இருக்கிறது. ஏற்கனவே, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்தள்ள குருஹர் ராய் சாகிப் குருத்வாராவில் ஐஎஸ் தீவிரவாதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 25 சீக்கியர்கள் கொல்லப்பட்ட சம்பவம் ஏற்கனவே நடந்துள்ளது.

பாக். உச்ச நீதிமன்றம் கண்டிப்பு
பஞ்சாப் மாகாணத்தில் கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக தானாக முன்வந்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்துள்ளது. நேற்று இதை விசாரித்த தலைமை நீதிபதி குல்சார் அகமது, ‘நூற்றுக்கணக்கான மக்கள் தடி, கம்புகள், கற்கள், செங்கல்களை வீசி கோயில் மீது தாக்குதல் நடத்தி சிலைகளை உடைத்துள்ளனர். கோயிலின் ஒரு பகுதியை தீ வைத்தும் எரித்துள்ளனர். இதை அதிகாரிகள் தடுக்கத் தவறியது கண்டனத்துக்குரியது. இந்த தாக்குதலால் உலக அரங்கில் பாகிஸ்தானின் நெற்பெயர் பாதிக்கும்,’ என்று கூறினார்.

எங்களை தனி விமானத்தில் அழைத்து சென்று விடுங்கள்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்பட்டு வருவதால், தலிபான்களின் தாக்குதல் அதிகமாகி இருக்கிறது. அரசு படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். இதனால், இந்நாட்டில் வசிக்கும் இந்துக்களும், சீக்கியர்களும் பீதியில் உள்ளனர். இந்நாட்டில் 650 சீக்கியர்கள் வசிக்கின்றனர். தனி விமானத்தின் மூலம் தங்களை இந்தியாவுக்கு மீட்டு செல்லும்படி ஒன்றிய அரசை அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : Afghan gurudwara ,Pakistan ,Taliban , Taliban militants, Attakasam
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...