×

டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் 14 எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்பு: கருப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தல்

புதுடெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, ராகுல் உள்ளிட்ட 14 எதிர்க்கட்சி தலைவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.  ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடந்தாண்டு நவம்பர் முதல் டெல்லியில் திக்ரி, சிங்கு, காஜியாபாத் எல்லைகளில் பஞ்சாப், அரியானா, உபி. விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பிறகும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனிடையே, நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த மாதம் 19ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இத்தொடரின் போது அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போட்டி நாடாளுமன்ற கூட்டத்தை கூட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடந்த 14 எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தில் நேற்று முன்தினம் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நாடாளுமன்றத்தில் இருந்து நேற்று பேருந்து மூலமாக ராகுல் தலைமையில்  டெல்லி ஜந்தர் மந்தருக்கு சென்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் முகக்கவசம் அணிந்து, கைகளை கோர்த்து ஒன்றிய அரசுக்கு எதிராக போராட்டத்தில் பங்கேற்றனர். இதில் காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக்  உள்பட 14 கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில், கருப்பு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும்படி ஒன்றிய அரசை அவர்கள் வலியுறுத்தினர்.

செல்போன்களில் மோடி ஊடுருவல்
ஜந்தர் மந்தரில் ராகுல் அளித்த பேட்டியில், ``விவசாய சட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு எங்களின் ஆதரவை தெரிவிக்கவே ஜந்தர் மந்தரில் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் கூடியுள்ளோம். பெகாசஸ் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என விரும்புகிறோம். ஆனால், அரசு அதற்கு மறுக்கிறது. காரணம், ஒவ்வொருவரின் மொபைல் போனிலும் பிரதமர் மோடி ஊடுருவி இருக்கிறார்,’’ என்றார்.

Tags : Jantar Mantar ,Delhi , Delhi, farmers, opposition leaders
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...