×

நாடாளுமன்றம் 14ம் நாளாக ஒத்திவைப்பு: கடும் அமளிக்கு இடையே 2 மசோதா நிறைவேற்றம்

புதுடெல்லி: பெகாசஸ், வேளாண் சட்டங்கள் தொடர்பாக கடும் அமளி ஏற்பட்டதால் நாடாளுமன்றம் வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ம் தேதி தொடங்கியது. இதில் பெகாசஸ் செல்போன் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக, புதிய வேளாண் சட்டங்களை நீக்குவது தொடர்பாகவும் விவாதம் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. ஆனால், விவாதம் நடத்த அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால், கடும் அமளி காரணமாக கூட்டத் தொடர் தொடங்கி 13 அலுவல் நாட்களும் முடங்கி உள்ளன. இந்நிலையில், 14ம் நாள் கூட்டத் தொடர் நேற்று கூடியது. மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும், பெகாசஸ், வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். இதனால், 15 நிமிடங்கள் மட்டுமே அவை நடந்த நிலையில் நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும், அமளிக்கு இடையே வரி சட்டங்கள் திருத்த மசோதா குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறு விளக்கம் அளித்தார். அதைத் தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
லடாக்கில் ஒன்றிய பல்கலைக் கழகம் அமைப்பதற்கான ‘ஒன்றிய பல்கலைக் கழகங்கள் சட்ட திருத்த மசோதா குறித்து கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளிக்க, அந்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. அப்போதும் அமளி அடங்காததால் அவை வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதே போல், மாநிலங்களவை தொடங்கியதும், டோக்கியோ ஒலிம்பிக்சில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் ரவி குமார் தஹியாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பின்னர், எதிர்க்கட்சிகள் அமளி செய்ததால் நண்பகல் வரை அவை ஒத்திவைக்கப்பட்டு பின்னர், திங்கட்கிழமை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.  மழைக்கால கூட்டத் தொடர் வரும் 13ம் தேதியுடன் நிறைவடைகிறது. முதல் 2 வார கூட்டத் தொடர் அமளியால் முடங்கிய நிலையில் இன்னும் 5 நாட்களே எஞ்சியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Parliament , Parliament, Adjournment
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...