×

ஜிடிபி வளர்ச்சி 9.5 சதவீதமாக நிர்ணயம்: குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மும்பை: ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை மறு சீராய்வு கூட்டம், கவர்னர் சக்தி காந்ததாஸ் தலைமையில் கடந்த 4ம் தேதி துவங்கியது. இதில், வட்டி மாற்றம், பண வீக்க விகிதம், பொருளாதார வளர்ச்சி உள்ளிட்டவை  குறித்து விவாதிக்கப்பட்டன. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளை, சக்தி காந்ததாஸ் நேற்று அறிவித்தார். இதன்படி, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றம் செய்யவில்லை. இது 4 சதவீதமாகவே நீடிக்கிறது. இதுபோல், ரிவர்ஸ் ரெப்போ விகிதமும் மாற்றமின்றி 3.35 சதவீதமாக நீடிக்கிறது. உறுப்பினர்களின் ஏகமனதான கருத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 நடப்பு 2021-22 நிதியாண்டுக்கான  சில்லரை விலை பண வீக்க விகிதம் 5.7 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது முன்பு 5.1 சதவீதம் என கணிக்கப்பட்டிருந்தது. இதுபோல், நடப்பு நிதியாண்டின் 2ம் காலாண்டில் சில்லரை விலை பண வீக்க விகிதம், ஏற்கெனவே கணிக்கப்பட்ட 5.4 சதவீதத்தில் இருந்து 5.9 சதவீதமாகவும், 3ம் காலாண்டில் 4.7 சதவீதத்தில் இருந்து 5.3 சதவீதமாகவும், 4ம் காலாண்டில் 5.3 சதவீதத்தில் இருந்து 5.8 சதவீதமாகவும் உயர்ந்திருக்கும். காரிப் அறுவடை காரணமாக 3ம் காலாண்டில் பண வீக்க விகிதம் குறைவதற்கும் வாய்ப்பு உள்ளது. பண வீக்கம் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுபோல், நடப்பு நிதியாண்டில் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 9.5 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுபோல் முதல் காலாண்டில் ஏற்கெனவே கணித்த 18.5 சதவீதத்தை விட உயர்ந்து 21.4 சதவீதமாகவும், 2ம் காலாண்டில் 7.3 தவீதமாகவும், 3ம் காலாண்டில் 7.2 சதவீதமாகவும், 4ம் காலாண்டில் 6.1 சதவீதமாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளது.

கொரோனா 2வது அலை தணிந்து வருவதால், பொருளாதார நடவடிக்கைகள் சகஜ நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது.  ரிசர்வ் வங்கி கவர்னராக உர்ஜித் படேல் இருந்தபோது, ரெப்போ வட்டி 6.5 சதவீதமாக இருந்தது. சக்தி காந்ததாஸ் பொறுப்பேற்ற பிறகு, கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரியில் இருந்து கடந்த ஜூலை மாதம் வரை, மேற்கொண்ட வட்டி குறைப்பு நடவடிக்கைகளால், கடந்த  கடன் வட்டி ஏற்கெனவே இருந்த கடன் தாரர்களுக்கு 2.17 சதவீதமும் குறைந்துள்ளது, புதிய கடன் தார்களுக்கு 1.7 சதவீதமும் குறைந்துள்ளது.

Tags : Reserve Bank, Notice
× RELATED இது உங்கள் ராம ராஜ்ஜியம்: ஆம் ஆத்மி இணையதளம் தொடக்கம்