ஒன்றிய அரசு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்: சரத்குமார் வலியுறுத்தல்

சென்னை: ஒன்றிய அரசு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ரா.சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கொரோனா பெருந்தொற்றால் கடந்த ஆண்டு பள்ளிகள் செயல்படாமல், 12 ஆம் வகுப்பு மாணவர்கள் உட்பட அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், எதிர்கால கனவுடன் உயர்கல்வியில் அடியெடுத்து வைக்கும் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், மத்திய அரசு கொரோனா 3 – வது அலை குறித்த முன்னெச்சரிக்கை இன்றி, மாணவர்களின் பின்புலத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வு வேறுபாடுகள் பற்றிய கவலையின்றி, செப்டம்பர் 12 - ம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருப்பது மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் மாணவர்களை அதிர்ச்சிக்கும், அச்சத்திற்கும் உள்ளாக்கியுள்ளது.

சமத்துவமற்ற கல்வி, சரிசமமற்ற பாடத்திட்டம், சீரற்ற கல்வி கட்டமைப்பு என்றிருக்கும்போது, மாநில பாடத்திட்டங்களில் பயிலும் மாணவர்களுக்கு மத்திய பாடத்திட்டத்தின் கீழ் ஒரே வகையான தேர்வு நடத்தும் இத்தகைய போட்டி நிலை உலகில் எந்த நாடுகளிலும் கிடையாது. பல்வேறு மொழிகள், மரபுகள், பண்பாடுகள், பழக்கவழக்கங்கள் கொண்ட பல மாநிலங்களை ஒருங்கிணைத்து கூட்டாட்சியாக  இந்திய ஆட்சி நடைபெறுகிறது. ஆனால், மாநில அதிகாரத்திற்குட்பட்ட கல்விதுறையில் மத்திய அரசு ஆதிக்கம் செலுத்த முனைவது முற்றிலும் ஜனநாயகத்திற்கு விரோதமானது. கிராமப்புற, நகர்ப்புற மாணவர்களுக்கிடையே நிலவும் சமூக, பொருளாதார வேறுபாடுகளை களையாமல், சமத்துவத்தை உருவாக்காமல், எளிய மாணவர்களின் வாய்ப்புகளை பறிக்கும் தடுப்பாக நீட் அமைந்துள்ளது.  தேர்வில் அதிக மதிப்பெண் பெற, வசதியுள்ள மாணவர்கள் தனியார் பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் செலவு செய்து பயில்வார்கள்.

வசதியற்ற மாணவர்களுக்கு தனியார் பயிற்சி சாத்தியமற்றது. நீட் தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றாலும் வசதியுள்ளவ மாணவர்களால் மருத்துவக்கல்லூரியில் சேர முடியும், நீட் தேர்வில் வசதியற்ற மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றால் அவர்களால் மருத்துவ கல்லூரியில் சேர முடியாது. நீட் தேர்வானது,  மருத்துவக்கல்லூரியில்  மாணவர்களின் சேர்க்கை பணத்தை அடிப்படையாக கொண்டு நடைபெறுவதை ஊக்குவிக்கிறது. நீட்டை காரணமாக வைத்து தனியார் பயிற்சி மையங்களும், வணிக கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. 11, 12 ஆம் வகுப்புகளில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் மருத்துவ படிப்பிற்கு ஒரு பொருட்டல்ல எனும் போது, மேல்நிலைக்கல்வியின் அவசியம் கேள்விக்குறியாகிவிடாதா? இரண்டு ஆண்டுகள் மாணவர்கள் கடுமையாக பயின்றதற்கு அவர்கள் அனுபவிக்கும் பலன், படித்த பாடத்திட்டம் வேறு, தேர்வு எழுதும் பாடத்திட்டம் வேறு, இது எந்த வகையில் நியாயம்?

இதே நிலை தொடருமானால், கல்வியின் நோக்கமும், கற்றல் திறனும் முற்றிலும் சிதைத்து விடுவதுடன், கல்வி கற்போரை வெறும் தேர்வு இயந்திரமாக மாற்றும். கல்வி நெறிகளுக்கு முற்றிலும் புறம்பான  நீட் நுழைவுத் தேர்வை எந்த வல்லுநர் குழுவும் பரிந்துரைக்கவில்லை. 08.03.2016 அன்று மத்திய அரசின் நல்வாழ்வுத்துறை சார்பாக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழுவும், 92 வது அறிக்கையாக, இந்திய அளவில் நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்குக் கேட்கும் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மிகத் தெளிவாக பரிந்துரைத்தது. அதனடிப்படையில் கூட மத்திய அரசு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கவில்லை. நீட் தேர்வுக்கு  விலக்குக் கோரித் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 01.02.2017 அன்று இரண்டு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

ஆனால் மத்திய அரசு அதையும் ஒரு பொருட்டாக எண்ணவில்லை. அனைத்திந்திய மருத்துவச் சேவைகளுக்கான கல்லூரி  கிமிமிவிஷி, யிமிறிவிணிஸி மற்றும்  மிமிஜி ஆகிய நிறுவனங்கள் தற்போதுவரை தனித்தனி நுழைவுத் தேர்வுகள் மூலம் தான் மாணவர் சேர்க்கை நடத்துகின்றன. இவைகளுக்கு மட்டும் விதிவிலக்கு ஏன்? இதுதான் நாடு முழுவதும் ஒரே தேர்வு என்பதற்கான அடையாளமா? தமிழக மாணவர்கள் மருத்துவ துறையில் உலகளாவிய மகத்தான சாதனை புரிந்திருப்பதுடன், ஈடில்லா திறமையுடன் உலகெங்கும் பணிபுரிந்து வருகிறார்கள். கல்வியில் இந்தியாவின் பல மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக திகழும் தமிழகத்தில் நீட் தேர்விற்கான அவசியம் ஏற்படவில்லை.

இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளாக மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு தேர்வு எழுத வைக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு, நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து அறிக்கை பெற்றிருந்தாலும், தேர்வுக்கு விலக்கு பெறும் நடவடிக்கையை தாமதமாக மேற்கொண்டால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். தமிழகத்திலுள்ள சமூகஆர்வலர்கள், ஜனநாயக இயக்கங்கள், பெரும்பான்மையான மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்ற ஒருமித்த குரலில் போராடி வருகிறார்கள்.

மக்களின் விருப்பமே அரசின் செயல்பாடாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், மத்திய அரசு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் அல்லது மாநிலங்களின் உரிமையை அங்கீகரிக்கும் விதமாக மருத்துவ படிப்பில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட 85% இடங்களுக்கு மாநில அளவில் நுழைவுத்தேர்வு நடத்தி கொள்வதற்கு அனுமதி வழங்கிடவும், மத்திய – மாநில அரசுகளின் உறவுகள் மேம்பட  அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ள 15% இடங்களுக்கு அகில இந்திய அளவில் நீட் தேர்வு நடத்தி கொள்ளலாம் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: