நல்ல பந்தில் தான் புஜாரா, கோஹ்லி ஆட்டம் இழந்தனர்..! மிடில் ஆர்டர் கவலை அளிக்கும் வகையில் இல்லை: ரோகித் சர்மா பேட்டி

நாட்டிங்காம்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் நாட்டிங்காமில் நடந்துவருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 183 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் ஜோரூட் 64 ரன் எடுத்தார். இந்திய பந்துவீச்சில் பும்ரா 4, ஷமி 3 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் முதல்இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் நாளில்ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன் எடுத்திருந்தது. 2வதுநாளான நேற்று ரோகித்சர்மா- கே.எல்.ராகுல் சிறப்பான தொடக்கம் அளித்தனர். முதல் விக்கெட்டிற்கு இருவரும் 97 ரன் சேர்த்த நிலையில், ரோகித் 36 ரன்னில் ஒல்லி ராபின்சன் பந்தில் கேட்ச் ஆனார். பின்னர் வந்த புஜாரா 4 ரன்களில் ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அடுத்த பந்திலேயே கேப்டன் விராட் கோஹ்லி கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த ரகானே 5 ரன்னில் தேவையின்றி ரன் எடுக்க ஓடி ஆட்டம் இழந்தார். மற்றொரு புறம் சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் அரைசதம் அடித்தார். 52 ரன் எடுத்திருந்த லோகேஷ் ராகுல், ஆண்டர்சன் பந்தில் ஸ்லிப்பில் கொடுத்த அற்புதமான கேட்சை டாம் சிப்லே தவறவிட்டார். நேற்று மழையால் ஆட்டம் முன்னதாகவே முடித்துக்கொள்ளப்பட்டது. நேற்றைய ஆட்ட நேரமுடிவில் இந்தியா 46.4 வது ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 125 ரன் எடுத்திருந்தது. லோகேஷ் ராகுல் 57, ரிஷப் பண்ட் 7 ரன்னில் களத்தில் உள்ளனர். இன்று 3வது நாள் ஆட்டம் நடக்கிறது. நேற்று ஆட்டம் முடிந்த பின்னர் ரோகித் சர்மா கூறியதாவது: எங்கள் மிடில் ஆர்டர் பேட்டிங் கவலைக்குரிய வகையில் இல்லை என்று நினைக்கிறேன்.

புஜாரா, விராட் கோஹ்லி எப்படி ஆட்டம் இழந்தார்கள் என்று பார்த்தால் உண்மையிலேயே அது நல்லபந்து. அதனால் எனக்கு அந்த விஷயத்தில் ஒரு கவலையும் தோன்றவில்லை. நாங்கள் நன்றாக தொடங்கினோம். அந்த நேரத்தில் வெளிப்படையாக, பந்துவீச்சாளர்கள் திரும்பி வரும் நேரங்கள் இருக்கும், பின்னர் நீங்கள் அதற்கு பதிலளிக்க வேண்டும். எங்களால் அதற்கு பதிலளிக்க முடியவில்லை, தற்போது எங்களுடைய முழு எண்ணமும் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற வேண்டும் என்பது தான். நிச்சயமாக, முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றால். 2வது இன்னிங்சில் நீங்கள் எதிரணிக்கு அழுத்தம் கொடுக்கலாம், என்றார்.

Related Stories: