நெல்லையில் மக்களை தேடி மருத்துவம் திட்டம்-சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்

நெல்லை : நெல்லை  மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்ட வாகனத்தை சபாநாயகர் அப்பாவு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பொதுமக்களின்  வீட்டுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் தமிழகத்தில் மக்களை தேடி  மருத்துவம் என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து  காணொலி மூலம்  நேற்று தொடங்கி வைத்தார்.

நெல்லை  மாவட்டத்தில் தொடக்க விழா நிகழ்ச்சி பாளையங்கோட்டை கக்கன்நகரில் நடந்தது. முதல்வர் தொடங்கி வைத்ததும் சபாநாயகர் அப்பாவு, பச்சை  கொடியசைத்து நடமாடும் மருத்துவ வாகனத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து  மாவட்ட கலெக்டர் விஷ்ணு முன்னிலை வகித்து பேசினார். கக்கன்நகர் பகுதியில் உள்ள  வீடுகளில் மருத்துவ குழுவினருடன் சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் உள்ளிட்டோர்  சென்று மக்களை தேடி மருத்துவம் திட்டப்பணிகளை ஆய்வு செய்தனர். மேலும்  மருந்துகள் அடங்கிய பெட்டகத்தையும் வழங்கினர்.

முதற்கட்டமாக நெல்லை மாநகர், நெல்லை மாவட்டம் சமூகரெங்கபுரத்தில் நேற்று தலா ஒரு  மருத்துவ குழு வாகனம் செயல்பட தொடங்கி உள்ளது.

 தொடர்ந்து மாநகர மண்டல  அளவிலும், மாவட்ட வட்டார அளவிலும் படிப்படியாக செயல்படுத்தப்படும். இக்குழுவினர் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று  உடல்நலம் குன்றியவர்கள் இருந்தால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பர்.  அடிப்படை மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். தேவைப்படுபவர்களுக்கு  மருந்து, மாத்திரை வழங்கப்படும். நீண்டநாள் படுக்கையில் நோயுற்று  இருப்பவர்களுக்கும் வீட்டிற்கு சென்று தொடர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு  செய்யப்படும்.

நிகழ்ச்சியில் பாளை கக்கன்நகர்  பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர்  உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளி கல்லத்தியானுக்கு முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரத்தை  சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.நிகழ்ச்சியில்  எம்எல்ஏக்கள் அப்துல்வகாப், ரூபி மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலர்  பெருமாள், மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன், சுகாதார பணிகள் இணை  இயக்குனர் (சென்னை) மதுசூதனன், நெல்லை இணை இயக்குனர் வெங்கட்ராமன், துணை  இயக்குனர் வரதராஜன், மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் சரோஜா, முன்னாள் எம்பி  விஜிலா சத்யானந்த், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர்  விஎஸ்ஆர்.ஜெகதீஸ், திமுக வக்கீல் அணி அமைப்பாளர் தினேஷ், நெசவாளரணி  அரசன் ஐயப்பன், மீனவரணி அமைப்பாளர் அந்தோணி, தகவல் தொழில்நுட்ப அணி  காசிமணி, சதீஷ்,  மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், தச்சை பகுதி  துணைச்செயலாளர் ஸ்டார் முருகன், மதிமுக பாளை பகுதி செயலாளர் மணப்படை மணி,  பாளையங்கோட்டை தாசில்தார் ஆவுடையப்பன், பிஆர்ஓ ஜெயஅருள்பதி  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து சமூக ரெங்கபுரத்திலும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். பாளையங்கோட்டை மண்டலத்தில் உள்ள 3 நகர்ப்புற சுகாதார நிலையங்களிலும், 12 சுகாதாரப் பிரிவுகளிலும், ராதாபுரம் வட்டாரத்தில் 4 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 23 சுகாதார நிலையங்களிலும் முதற்கட்டமாக துவக்கப்பட்டுள்ளது.

என்னென்ன மருத்துவ பயன்கள்

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் வீட்டிற்கு வரும் மருத்துவ குழுவினர் தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகள் செய்தல், தேவைப்படும் மருந்துகளை வழங்குதல், பிசியோதெரபி சிகிச்சைகள், இயலா நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய வலி நிவாரணம், ஆதரவு சிகிச்சை, உடற்பயிற்சி அமர்வுகள், பெரிட்ேடானியல் டயாலீசிஸ் பைகள், பிற மருத்துவ தேவைக்கான சிகிச்சைகள், கர்ப்பிணி பராமரிப்பு, தடுப்பூசி சேவைகள் செய்யப்படும். இதர சேவைக்கு பரிந்துரை செய்யப்படும். 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகள் பட்டியல், 45 வயதுக்கு கீழுள்ள வீட்டை விட்டு வரமுடியாத நோயாளிகள் பட்டியல் தயார் செய்து 2 மாதத்திற்கான மருந்துகள் வீட்டிற்கே சென்று வழங்கப்படும்.

Related Stories:

More
>