×

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் ரவிக்குமார் தாஹியாவுக்கு ரூ. 4 கோடி பரிசு!: ஹரியானா முதல்வர் அறிவிப்பு..!!

சண்டிகர்: டோக்கியோ ஒலிம்பிக்சில் வெள்ளி பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் ரவிக்குமார் தாஹியாவுக்கு ரூ. 4 கோடி ரொக்கம் உள்ளிட்ட பரிசுகளை ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது. 57 கிலோ ப்ரீ ஸ்டைல் மல்யுத்தத்தில் ரஷ்யாவை சேர்ந்த உலக சாம்பியன் ஜவுரிடம் 4க்கு 7 என்ற கணக்கில் ரவிக்குமார் தோல்வியை தழுவினார். இருந்தாலும் வெள்ளி பதக்கத்தை கைப்பற்றி அவர் நாட்டுக்கு பெருமை சேர்த்தார். ரவிகுமாருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்களும், விளையாட்டு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த தருணத்தை தொலைக்காட்சியில் பார்த்து மகிழ்ந்ததாக தெரிவித்துள்ள ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார், ரவிக்குமாரின் திறமையை பாராட்டி 4 கோடி ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். அத்துடன் அவருக்கு கிளாஸ் 1 அரசு பணியும் வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.

மேலாக ரவிகுமாரின் சொந்த ஊரான அரியானா மாநிலம் சோனிபேட் மாவட்டத்தில் உள்ள நாரி கிராமத்தில் நவீன தொழில்நுட்பத்தில் உலகத்தரம் வாய்ந்த மல்யுத்த உள்விளையாட்டு அரங்கம் கட்டப்படும் என்றும்  முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார். அரியானாவைச் சேர்ந்த 23 வயதான ரவிகுமார் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பதக்கத்தை சுவைத்த 5வது இந்தியர் என்ற பெருமையை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Ravikumar Tahiya ,Tokyo Olympics ,Haryana ,Chief Minister , Tokyo Olympics, Ravikumar Tahiya, Rs. 4 crore prize
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...