×

உ.பி.யில் பெய்து வரும் கனமழையால் கங்கை, யமுனை நதிகளில் வெள்ளம்!: நீரில் மிதக்கும் நூற்றுக்கணக்கான வீடுகள்..உடமைகளை இழந்து மக்கள் பரிதவிப்பு..!!

பிரயாக்ராஜ்: உத்திரப்பிரதேச மாநிலத்தில் கங்கை, யமுனை நதிகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதை ஒட்டி கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. உத்திரப்பிரதேசம் மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்குள்ள கங்கை, யமுனை நதிகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பாய்ந்து செல்கிறது. சில இடங்களில் கரைகளுக்கு அருகே உள்ள தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சோட்டா பகதா, தரகானே ஜுன்ஜு ஆகிய பகுதிகளில் வீடுகளில் சுமார் 5 அடி அளவுக்கு வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளது.

உடைமைகள் அனைத்தும் வெள்ளம் அடித்துசென்றுவிட்டதால் அப்பகுதி மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். பிரயாக்ராஜ் மாவட்டத்தில் பல்வேறு முக்கிய சாலைகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பக்சி அணையை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கங்கை, யமுனை நதிகளில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் நதிக்கரைகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோரை பிரயாக்ராஜ் மாவட்ட நிர்வாகத்தினர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து சோட்டா பகதா கிராமவாசிகள் தெரித்ததாவது, நான்கு நாட்களாகவே நதியில் வெள்ளம் சிறிது சிறிதாக உயர்ந்து வந்தது. கடந்த 2 நாட்களில் நீர்மட்டம் அதிகரித்து பல்வேறு வீடுகள் நீரில் மூழ்கிவிட்டன. நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அனைவரும் இங்கிருந்து வெளியேறி வருகின்றனர். திடீரென வெள்ளம் அதிகரித்துவிட்டதால், பொருட்களை கூட எடுக்க முடியாமல் மக்கள் மேடான பகுதிகளுக்கு சென்று உயிர் தப்பியுள்ளனர் என்று குறிப்பிட்டார்.


Tags : UP ,Ganga ,Yamuna , UP, heavy rains, floods, hundreds of houses
× RELATED ஏய்… தள்ளு… தள்ளு… தள்ளு! ரயில்...