இவர்களின் வெற்றி இந்தியாவின் இளம் மகள்களை ஹாக்கி விளையாடவும், அதில் சிறப்பான நிலையை எட்டவும் பெரிதும் ஊக்குவிக்கும் : பிரதமர் மோடி!!

டெல்லி : “டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டியில், மகளிர் ஹாக்கியில் நாம் மயிரிழையில் பதக்கத்தை இழந்தோம். ஆனால் நமது அணி, நம்மால் முடிந்த அளவு சிறப்பாகச் செய்வோம், புதிய எல்லைகளை எட்டுவோம் என்ற புதிய இந்தியாவின் உணர்வை பிரதிபலிக்கிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நமது மகளிர் ஹாக்கி அணியின் மிகச் சிறப்பான ஆட்டத்தை நாம் என்றென்றும் நினைவு கூர்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள தொடர் சுட்டுரைச் செய்திகளில் கூறியுள்ளதாவது:

“டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் நமது மகளிர் ஹாக்கி அணியின் மிகச் சிறப்பான ஆட்டத்தை நாம் என்றும் நினைவு கூர்வோம். அவர்கள் தம்மால் இயன்ற அளவு சிறந்த விளையாட்டுத் திறனை தொடர்ந்து வெளிப்படுத்தினார்கள். இந்த அணியின் ஒவ்வொரு உறுப்பினரும், அசாத்திய துணிவையும், திறமையையும், உறுதியையும் பெற்றிருக்கிறார்கள். இந்த உன்னதமான அணியை எண்ணி இந்தியா பெருமைப்படுகிறது.

மகளிர் ஹாக்கியில் நாம் மயிரிழையில் பதக்கத்தை தவற விட்டோம். ஆனால், இந்த அணி, நம்மால் முடிந்த அளவு சிறப்பாகச் செய்வோம், புதிய எல்லைகளை எட்டுவோம் என்ற புதிய இந்தியாவின் உணர்வை வெளிப்படுத்துகிறது. மிக முக்கியமாக, இவர்களின் வெற்றி இந்தியாவின் இளம் மகள்களை ஹாக்கி விளையாடவும், அதில் சிறப்பான நிலையை எட்டவும் பெரிதும் ஊக்குவிக்கும். இந்த அணியால் பெருமை கொள்கிறேன்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இன்று நடைபெற்ற ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி இறுதிவரை போராடி இங்கிலாந்து அணியிடம் 4-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்துள்ளது. இந்தியா 3 கோல்கள் அடித்த நிலையில், இங்கிலாந்து 4 கோல் அடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இப்போட்டியில் முதல் பாதியில் இந்தியா முன்னிலை பெற்று வந்த நிலையில், இரண்டாம் பாதியில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>