×

ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை: டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க முடிவு

டெல்லி: டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கக்கூடிய நிலையில் விவசாயிகளின் போராட்டத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ராகுல்காந்தி தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை பொறுத்தவரை கடந்த ஜூலை மாதம் 19ஆம் தேதியில் இருந்து துவங்கி நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 13 வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. அதேசமயத்தில் கடந்த 19ஆம் தேதியில் இருந்தே நாடாளுமன்ற அலுவல்கள் சரியான முறையில் நடைபெற முடியாத நிலை தான் இருந்து வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும், பெகாசஸ் விவகாரம், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பியதன் காரணமாக நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை இரண்டுமே முடங்கின. எதிர்க்கட்சிகளின் கூச்சல், குழப்பத்திற்கு இடையே பல மசோதாக்களை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.

எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை பெகாசஸ் விவகாரம் என்பது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. எனவே அந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தை இரு அவைகளிலும் வாதிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மத்திய அரசை பொறுத்தவரை இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கும் முடிவில் இல்லை. பிரதமரோ அல்லது மத்திய உள்துறை அமைச்சரோ விளக்கமளிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்ததன் காரணமாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அவையில் இந்த பிரச்சனையை எழுப்பினாலும் அவையை நடத்த முடியாத ஒரு சூழல் இருந்து வருகிறது.

விவசாயிகளை பொறுத்தவரை மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தி கடந்த நவம்பர் மாதம் 26ஆம் தேதியில் இருந்து தலைநகர் டெல்லியின் எல்லை பகுதிகளில் போராட்டம் நடத்தி கொண்டுள்ளனர். ஜூலை 20ஆம் தேதியில் இருந்து விவசாயிகள் நாடாளுமன்றம் அருகே ஜந்தர்மந்தர் என்ற இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் போட்டி நாடாளுமன்றம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் கலந்து கொள்வது என்று இன்று காலை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Rakulkanti ,Delhi , Farmers
× RELATED மோடி தலைமையில் அமைதியான ஆட்சி பிற...