×

'எழுத்து தேர்வில் அனுமதி; உடற்தகுதி தேர்வில் புறக்கணிப்பு'!: கடலூரில் போலீஸ் தேர்வுக்கு வந்த 9 விதவைகளை வெளியேற்றியதால் சர்ச்சை..!!

கடலூர்: கடலூரில் போலீஸ் உடற்தகுதி தேர்வுக்கு வந்த 9 விதவைகளை ஒரேநேரத்தில் வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. எழுத்துத் தேர்வில் தங்களை அனுமதித்துவிட்டு உடற்தகுதி தேர்வில் புறக்கணிப்பதாக பாதிக்கப்பட்ட பெண்கள் கண்ணீர்மல்க குற்றம்சாட்டியிருக்கின்றனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறைதுறைகளில் காலியாக உள்ள 11,741 இரண்டாம்நிலை காவலர் பணியிடங்களுக்கு புதிதாக ஆட்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர். அதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்றது. அதில் வெற்றிபெற்றவர்களுக்கு தற்போது மாநிலம் முழுவதும் உடற்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்ற 3,794 பேருக்கு அங்குள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று விதவை பெண்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் 30 விதவை பெண்கள் பங்கேற்றனர். அவர்களில் 9 பெண்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வெளியேற்றப்பட்ட 9 பெண்களும் உதவி ஆட்சியரிடம் இருந்து பெறப்படும் ஆதரவற்றோர் விதவைகள் என்பதற்கான சான்றிதழ் வைத்திருக்கவில்லை என காரணம் கூறப்பட்டது. அதற்கு பதிலாக தாசில்தார் வழங்கிய விதவைகள் என்ற சான்றிதழ்களை மட்டுமே வைத்துள்ளனர்.

ஆதரவற்றோர் விதவைகள் என்ற சான்றிதழ்கள் இருந்தால் தான் உதவிட யாருமே இல்லாத விதவைகள் என கருதப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் விளக்கம் கோரப்பட்டது. அதனை ஏற்க 9 பெண்களும் மறுத்துவிட்டனர். தங்களிடம் உள்ள விதவைகள் சான்றிதழ்கள் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்டு இருப்பதாக கூறிய அவர்கள், அதன் மூலம் எழுத்துத் தேர்வில் பங்கேற்று வெற்றிபெற்று இருப்பதை கண்ணீர்மல்க சுட்டிக்காட்டினர். 9 பெண்களின் முறையீடு கடைசி வரை ஏற்கப்படவில்லை. அதனால் அவர்கள் கண்ணீர் சிந்தியபடி போட்டி களத்தில் இருந்து செல்ல நேர்ந்தது. கணவரை இழந்த தாங்கள் காவல் பணியில் சேர முடியாமல் புறக்கணிக்கப்படுவது வேதனை அளிப்பதாக தெரிவித்த அவர்கள், தங்களின் பிரச்னை மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Tags : Cadalur , Cuddalore, Police Selection, Widow
× RELATED மூதாட்டி காலை கடித்து குதறிய முதலை