×

வருமான வரி சட்டத்தில் இருந்து ரெட்ரோ வரியை நீக்கும் மசோதாவை ஒன்றிய அரசு மக்களவையில் நிறைவேற்றியது!!

டெல்லி : வருமான வரி சட்டத்தில் இருந்து ரெட்ரோ வரியை நீக்கும் மசோதாவை ஒன்றிய அரசு மக்களவையில் நிறைவேற்றியுள்ளது. 2012ம் ஆண்டில் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் ரெட்ரோ வட்டி அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சொத்துக்கள் மீதான மறைமுக பரிமாற்றத்திற்கு இந்த வரி வசூலிக்கப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் வருவாயை விட சர்ச்சைகளும் வழக்குகளும் தான் அதிகம் என்பதால் இதனை நீக்க ஒன்றிய அரசு முனைந்துள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்த கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம், 2006ம் ஆண்டில் கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தை தொடங்கியது. அதன் பிறகு கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்தின் பங்குகள் கெய்ர்ன் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டன.இதனால் கெய்ர்ன் இந்தியா முதலீட்டு ஆதாயம் அடைந்துள்ளதாக ரூ.10,247 கோடி வரி விதித்தது வருமான வரித்துறை. இதனை செலுத்த மறுத்து வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திலும் டெல்லி உயர்நீதிமன்றத்திலும் கெய்ர்ன் நிறுவனம் முறையீட்டு தோல்வி கண்டது.

இதனால் 2011ல் தனது பெரும் பங்குகளை வேதாந்தாவிற்கு விற்றது. இருப்பினும் 10% பங்குகள் மற்றும் ஈவுத் தொகையை வருமான வரித்துறை முடக்கி தொகையை வசூல் செய்தது. இதனை எதிர்த்து நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள சர்வதேச தீர்ப்பாயத்தில் கெய்ர்ன் நிறுவனம் முறையிட்டது. இந்த வழக்கை விசாரித்த சர்வதேச தீர்ப்பாயம், 8800 கோடி ரூபாயை கெய்ர்ன் நிறுவனத்திற்கு செலுத்த கடந்த ஆண்டு டிசம்பர் மாடஹ் உத்தரவிட்டது.  இந்த தீர்ப்பை எதிர்த்து இந்திய அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால் பணத்தை வசூலிக்கும் விதமாக வெளிநாடுகளில் உள்ள இந்தியாவின் சொத்துக்களை முடக்கும் முயற்சியில் கெய்ர்ன் நிறுவனம் ஈடுபட்டது.  

இதே போல் மற்றொரு வழக்கில் வோடபோன் நிறுவனமும் 2016ம் ஆண்டில் சர்வதேச தீர்ப்பாயத்தை நாடியது. இந்த வழக்கிலும் இந்தியா 40 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த சூழலில் தான் ரெட்ரோ வரியை நீக்க முடிவு செய்து ஒன்றிய அரசு மக்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றியது. நிறுவனங்கள் தொடர்ந்த வழக்குகளை திரும்பப் பெறும் பட்சத்தில் வசூலிக்கப்பட்ட வரியை திருப்பி அளிக்கவும் ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags : United States ,Lok Sabha , ஒன்றிய அரசு
× RELATED மக்களவை தேர்தல்!: பல லட்சம் ரூபாய்...