உடல்நலக்குறைவால் மரணமடைந்த அதிமுக அவை தலைவரும், முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை..!!

சென்னை: சென்னையில் உடல்நலக்குறைவால் மரணமடைந்த அதிமுக அவை தலைவரும், முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். மருத்துவமனையில் இருந்து தண்டையார்பேட்டையில் உள்ள வீட்டிற்கு மதுசூதனன் உடல் எடுத்து செல்லப்பட்டது. அங்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,  அவர்களுடன் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம், மற்றும் கே.பி.முனுசாமி,  உள்ளிட்டோரும் அதிமுக முன்னனி நிர்வாகிகளும் மதுசூதனன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் மதுசூதனன் உடலுக்கு மலரஞ்சலி செலுத்தினர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மதுசூதனன் உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செய்தார். அவருடன் அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து, தண்டையார்பேட்டையில் உள்ள இல்லத்தில் மதுசூதனனின் உடலுக்கு சசிகலா நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பின்னர் சசிகலா மதுசூதனனின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார். பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் மாலை 4 மணியளவில் மூலக்குத்தலம் மின் மயானத்தில் மதுசூதனன் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு எரியூட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மதுசூதனனுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நீண்ட நாட்கள் சிகிச்சையில் இருந்த மதுசூதனன் நேற்று மாலை 3:45 மணியளவில் மரணமடைந்தார்.

இவரது மரணம் தங்களை ஆற்றவுண்ணா துயரத்திலும் மிகுந்த வேதனையிலும் ஆழ்த்தியதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளனர். மதுசூதனன் மறைவால் நாளை வரை அதிமுக சார்பில் துக்க நாட்களாக அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த கட்சியின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

Related Stories: