×

பூஜையறை பராமரிப்பு!

*     பூத்தொடுக்கும் நார் மற்றும் நூலை காலி ஊதுவத்தி அட்டைப்பெட்டிகளில் வைத்தால் வாசனை இல்லாத பூக்களை தொடுத்தாலும் நாரோடு சேர்ந்து பூவும் மணக்கும்.
*      ரோஜா, சாமந்தி பூக்கள் சில காம்பில்லாமல் இருக்கும். எரிந்த ஊதுவத்தி குச்சியை அதன் நடுவில் செருகி படத்திற்கு வைக்கலாம்.
*      பெரிய அகல் விளக்குகள் வாங்கி வைத்து அவற்றில் மெழுகுவர்த்தி, தசாங்கம், சாம்பிராணிக் கூம்பு ஏற்றலாம், கையை சுட்டுக்கொள்ளாமல் கற்பூர ஆரத்தி காண்பிக்கலாம்.
*      எலுமிச்சம்பழம் பிழியும் கருவியில் அரிசி மாவைப் போட்டு தரையில் தட்ட ஒரே மாதிரியான அழகிய சிறு கோலங்களை
பூஜையறையில் போடலாம்.
*      சூடான டீ, காபி வைக்கும் கோஸ்டர்களின் மேல் அகல் விளக்கை ஏற்றி வைத்தால் தரையில் எண்ணெய்க்கறை படாமல் இருக்கும்.
*     கற்பூர பாட்டிலில் நாலைந்து மிளகு சேர்த்து வைத்தால் கற்பூரம் கரையாமல் இருக்கும்.
*      மயிலிறகை பூஜையறையில் ஒட்டினால் பல்லி தொல்லை இருக்காது. தேவதைகளை ஆகர்ஷணம் செய்யும் சக்தியும் மயிலிறகிற்கு உண்டு.
*      பூஜையறை விளக்கை எண்ணெய் இல்லாமல் தானாகவே அணையவிடக்கூடாது. பூஜை முடிந்தபின் சிறிது நேரம் கழித்து, பெண்கள் மலர்கொண்டு ஒத்தி விளக்கை
அணைக்கலாம்.
*      பூஜை செய்த மணமிக்க மலர்களை வீணாக்காமல், அடுத்தநாள் காயவைத்து சீயக்காயோடு சேர்த்து அரைத்து மணமுள்ள சீயக்காயாகப் பயன்படுத்தலாம்.
*      மழை நாட்களில், தீபமேற்றும் தீப்பெட்டி நமுத்துப் போகாமல் இருக்க அதனுள் நான்கு அரிசி மணிகளைப் போட்டு வைக்கலாம்.
*      பூஜையறை கதவுகளில் சிறுசிறு மணிகளைக் கட்டி வைத்தால் திறக்கும்போதும், மூடும்போதும் இனிமையான மணியோசையை நற்சகுனமாகக் கேட்டு மகிழலாம்.
*     ஊதுவத்தியை தண்ணீரில் நனைத்து பின் ஏற்றிவைக்க, ஊதுவத்தி நீண்டநேரம் எரிந்து மணம் பரப்பும்.
*      வெளியூருக்குச் சென்றால் ஒரு கிண்ணத்தில் அரிசி-துவரம் பருப்பையும், இன்னொரு கிண்ணத்தில் நல்ல தண்ணீரையும் பூஜையறையில் வைத்து விட்டுச் செல்ல வேண்டும். திரும்ப வரும்வரை அவையே தெய்வங்களுக்கு
பிரசாதங்கள்!
*      காலையிலும் மாலையிலும் கோதூளி லக்னம் எனப்படும் 5-6 மணிக்கு பூஜையறையில் விளக்கேற்றுவதும், வீட்டு வாசலுக்கு வெளியேயும் விளக்கேற்றி வைத்தால்
தேவதைகளின் ஆசி கிட்டும்.
*      வியாழக்கிழமையன்றே பூஜைக்கான பொருட்களை தேய்த்து சுத்தம் செய்து, விளக்குகளுக்கு குங்குமம் இட்டு, திரிபோட்டு வைத்தால் வெள்ளிக்கிழமை பூஜைக்கு உதவியாக இருக்கும்.
*      ஆணி இல்லாத படத்திற்கு பூ வைக்க, பால்பாய்ன்ட் பேனா மூடியை சலஃபன் டேப் கொண்டு சுவாமி படத்தின் பின் தலைகீழாக ஒட்டவும். இந்த மூடியினுள் காம்பைச் செருகி பூ வைக்கவும்.
*      பாத்திரம் கழுவ உதவும் க்ளீனிங் திரவம் தீர்ந்த பின் அந்த பாட்டிலில் விளக்கேற்ற உதவும் எண்ணெயை ஊற்றி வைத்துக் கொண்டால் விளக்குகளுக்கு சிந்தாமல் எண்ணெய்
ஊற்றலாம்.
*      அஞ்சறைப் பெட்டியில் மஞ்சள்தூள், குங்குமம், அட்சதை, கற்பூரம், வாசனைப்பொடி, தீப்பெட்டி போன்றவற்றை போட்டு வைத்தால் இடம் அடைக்காமல் இருக்கும்.
*      பூஜையறையில் ஒரே அளவுள்ள படங்களை மாட்டினால் பார்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் எளிதாக இருக்கும்.
*      வீட்டில் கட்டாயம் குலதெய்வ படத்தை வைத்து பூஜிக்க வேண்டும். விளக்கெண்ணெயும் நெய்யும் கலந்து தீபம் ஏற்ற குலதெய்வ அருள் கிட்டும்.

Tags : room ,
× RELATED ஓசூரில் வார் ரூம் திறப்பு