பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங்கின் முதன்மை அரசியல் ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார் பிரஷாந்த் கிஷோர்!: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

சண்டிகர்: பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங்கின் முதன்மை அரசியல் ஆலோசகர் பதவியை பிரபல தேர்தல் வியூக வல்லுனரான பிரஷாந்த் கிஷோர் ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அடுத்தாண்டு தொடக்கத்தில் பஞ்சாப் மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் பிரஷாந்த் கிஷோர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பிரசாந்த் கிஷோர் எடுத்துள்ள இந்த முடிவுக்குப் பின்னால், மிகப் பெரிய தொலைநோக்கு பார்வை இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. முதலமைச்சர் அம்ரீந்தர் சிங்கிற்கும், மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் பிரஷாந்த் கிஷோரின் ராஜினாமா பஞ்சாப் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர் சிங்கின் முதன்மை அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்த பிரஷாந்த் கிஷோருக்கு, மாதம் ஒரு ரூபாய் என்ற அளவில் கௌரவ சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

கடந்த 2017ம் ஆண்டு நடந்த தேர்தலில் அம்ரீந்தர் சிங்கிற்கு தேர்தல் வியூகம் வகுக்கும் பணியை பிரஷாந்த் கிஷோர் மேற்கொண்டிருந்தார். இதில் காங்கிரஸ் வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்தது. அண்மையில் தமிழகம், மேற்குவங்கம் சட்டப்பேரவை தேர்தல்களில் திமுக, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு ஆலோசகராக இருந்தார். இரு கட்சிகளும் அமோக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தன. இதன் பிறகு தேர்தல் வியூக பணிகளை இனிமேல் மேற்கொள்ளப்போவதில்லை என்று பிரஷாந்த் கிஷோர் அறிவித்திருந்தார். பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் தான் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் உக்திகளை வகுத்து கொடுக்கும் பணியில் கவனம் செலுத்தி வருகிறது.

2019ம் ஆண்டில் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, 2020ம் ஆண்டில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், 2021ம் ஆண்டு மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலுக்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் ஆலோசனைகளை வழங்கினார். இதில் 2017ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் பெற்ற தோல்வியை தவிர மற்ற அனைத்துப் பகுதிகளிலும் இவர் சார்ந்த கட்சிகள் வெற்றி பெற்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அளவில் முக்கிய கட்சிகளின் சமூக ஊடகங்களை கையாளுதல் மற்றும் தேர்தல் வியூகங்களை வகுத்துக்கொடுத்தல் போன்றவற்றால் பிரபலமானவர் பிரஷாந்த் கிஷோர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: