×

அண்ணாமலை போராட்டத்தை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பேட்டி!!

தஞ்சை : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போராட்டத்தை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை விமர்சித்துள்ளார்.காவிரி குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முயற்சியை எதிர்த்து ஆகஸ்ட் 5-ம் தேதி மாபெரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதன் படி, இன்று தஞ்சை பனகல் கட்டிடம் அருகே அண்ணாமலை தலைமையில் 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அண்ணாமலை தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் தமிழக பாஜக இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தொடக்கிவைத்த நிலையில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியலுக்காக ஆர்ப்பாட்டத்தை நடத்துவதாகவும் மத்திய அரசிடம் அனுமதி பெற்று அணை கட்டுவது உறுதி என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், யார் எதிர்த்தாலும் எங்களுக்கு அது பற்றி கவலை இல்லை.விரைவில் உரிய ஆவணங்களுடன் அனுமதி பெற்று மேகதாது அணை கட்டுவோம். அணை கட்டுவதில் எந்த மாற்றமும் இல்லை. அணைக்கு எதிராக யார் போராடினாலும் பரவாயில்லை,என்றார்.இதனிடையே மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கர்நாடக காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.பெங்களுருவில் ரேஸ் கோர்ஸ் சாலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கர்நாடக விரோதி அண்ணாமலை ஒழிக,  தமிழக பாஜக ஒழிக என முழக்கமிட்டனர்.


Tags : Karnataka ,Chief Minister ,Basavaraj ,Annamalai , முதல்வர் பசவராஜ் பொம்மை
× RELATED கர்நாடக மாஜி பாஜ எம்எல்ஏக்கள் 2 பேர் காங்கிரசில் இணைந்தனர்