பெகாசஸ் தொழில்நுட்பம் மூலம் தனிநபர் ரகசியத்தை வேவு பார்ப்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது : உச்சநீதிமன்றத்தில் கபில் சிபல் வாதம்!!

டெல்லி : பெகாசஸ் ஸ்பைவேர் மூலமாக உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் என்.ராம் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் நடந்தவை பின்வருமாறு..

தலைமை நீதிபதி : நாளிதழ் தகவல்கள் தவிர என்ன ஆதாரங்கள் மனுதாரர்களிடம் உள்ளன.

வழக்கறிஞர் எம்.எல்.சர்மா : செய்தித்தாள் தகவல்களை ஆதாரமாக கொண்டு வழக்கு தொடரவில்லை.அமெரிக்க நீதிமன்றத்தில் இஸ்ரேலில் என்எஸ்ஓ நிறுவனம் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டே வழக்கு தொடரப்பட்டது.

தலைமை நீதிபதி : உளவு பார்க்கப்பட்டதாக சொல்பவர்கள் யாரும் இதுவரை ஏன் புகார் அளிக்கவில்லை?. 2019 முதல் ஒட்டுக்கேட்பு விவகாரம் வெளிவந்ததாக கூறப்படும்போது தற்போது அவசரமாக கையாளுவது ஏன் ?பெரும்பாலும் பத்திரிகைகளில்  செய்திகளின் அடிப்படையில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. பத்திரிகை செய்திகளின் தன்மையை ஆராய்ந்த பிறகே விசாரணைக்குள் செல்ல முடியும். பெகாசஸ் ஒட்டுக்கேட்பு குற்றச்சாட்டுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் சந்தேகமில்லை.

(ஒட்டுக்கேட்பு வழக்கில் தமது வாதங்களை முன்வைக்குமாறு மூத்த வழக்கறிஞர் கபில் சிபலுக்கு தலைமை நீதிபதி அழைப்பு)

கபில் சிபல் : பெகாஸஸ் ஆனது நமக்கு தெரியாமலேயே நமது வாழ்க்கையில் நுழைந்து விடக்கூடிய மோசமான தொழில்நுட்பம்.நமது ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கக்கூடியது பெகாசஸ் மென்பொருள். தனிமனித கவுரவம், ரகசிய தன்மை, நமது குடியாட்சியின் விழுமியங்களை தாக்கக் கூடியது இந்த தொழில்நுட்பம். தொழில்நுட்பம் மூலம் தனிநபர் ரகசியத்தை வேவு பார்ப்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது.என்எஸ்ஓ நிறுவனம் உளவு பார்க்கக் கூடிய தகவல்களை ஒரு நாட்டின் அரசுகளுக்கு மட்டுமே வழங்கும்.பெகாசஸ் தொழில்நுட்பம் ஊறு விளைவிக்கக் கூடியது. சட்டவிரோதமானது.2019 முதல் உளவு பார்க்கப்பட்டாலும் அதுகுறித்த விவரம் தற்போது தான் வெளியாகி உள்ளது.அதனால் தான் இத்தனை நாட்களாக யாரும் புகார் எதுவும் தெரிவிக்காமல் இருந்தனர். 

Related Stories:

More