பாலக்காடு கோட்டத்தின் மாற்றாந்தாய் மனப்பான்மை: பொள்ளாச்சி - கிணத்துக்கடவு தடம்: மதுரை கோட்டத்துடன் இணையுமா?: ரயில் உபயோகிப்பாளர் சங்கம் வலியுறுத்தல்

பழநி: பொள்ளாச்சி - கிணத்துக்கடவு ரயில்வே தடத்தை மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டுமென ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.பழநி ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தின் தலைவர் முருகானந்தம், செயலாளர் பச்சைமுத்து, பொருளாளர் நாகேஷ்வரன் உள்ளிட்டோர் திண்டுக்கல் எம்பி வேலுச்சாமிக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனு: பொள்ளாச்சி - கிணத்துக்கடவு - போத்தனூர் - கோவை ரயில்வே வழித்தடம் தமிழகத்தின் 2வது பெரிய நகரான கோவையை, பொள்ளாச்சி, உடுமலை, பழநி வழியாக தென்தமிழகத்துடன் இணைக்கும் மிக முக்கிய ரயில்வே வழித்தடமாக உள்ளது. கடந்த 2006ம் ஆண்டு சேலம் கோட்டம் உதயமானபோது பொள்ளாச்சி ரயில்வே பகுதிகள் மதுரை கோட்டத்தில் இருந்து, பாலக்காடு கோட்டத்திற்கு தாரை வார்க்கப்பட்டது.

அன்று முதல் பொள்ளாச்சி, உடுமலை, பழநி ரயில் வழித்தடத்தை பாலக்காடு கோட்ட அதிகாரிகள் மாற்றந்தாய் போல் கருதி வருகின்றனர். பொள்ளாச்சி - போத்தனூர் வழித்தடத்தில் அகலப்பாதை பணிகள் நிறைவடைந்து 4 ஆண்டுகளுக்கு மேல் முடிந்தாலும், இதுவரை ஒரு விரைவு ரயிலைக் கூட பாலக்காடு கோட்டம் இயக்க முன் வரவில்லை. கோவையில் இருந்து பழநி வழித்தடத்தில் மதுரை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம் போன்ற ஊர்களுக்கு ரயில்கள் இயக்கினால் கல்லூரிகள், அலுவலகங்கள், மருத்துவ சிகிச்சை, வியாபாரம் மற்றும் ஆன்மீக தலங்களுக்கு செல்லும் பக்தர்கள் போன்றோருக்கு மிகப் பயனுள்ளதாக இருக்கும்.

1,700 கிமீ நீளமுள்ள ரயில்பாதை உள்ள கேரள மாநிலத்திற்கு ரயில்வேத்துறைக்கென தனி அமைச்சர் உள்ளார். எனவே, 5,200 கிமீ நீளமுள்ள ரயில்பாதை உள்ள தமிழகத்திற்கு தனி அமைச்சர் ஏற்படுத்த தமிழக முதல்வரை வலியுறுத்த வேண்டும். பொள்ளாச்சி - கிணத்துக்கடவு, பொள்ளாச்சி - மீனாட்சிபுரம் ரயில் தடத்தை தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்துடன் இணைக்க முழு முயற்சி எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>