×

அஞ்சலகத்தில் ஆதார் கார்டு எடுக்க அலைக்கழிப்பு: குழந்தைகளுடன் இளம்பெண் சாலையில் அமர்ந்து தர்ணா

திசையன்விளை: திசையன்விளை அருகே உள்ள பெட்டைக்குளத்தை சேர்ந்தவர் புஷ்பா. இவர் தனது இரண்டு குழந்தைகளுக்கு ஆதார் கார்டு எடுப்பதற்காக  திசையன்விளை அஞ்சலகத்திற்கு வந்தார். கொரோனா பரவலை தடுப்பதற்காக தினமும் குறிப்பிட்ட அளவில் மட்டும் டோக்கன் வழங்கி ஆதார் கார்டு எடுக்கப்படுகிறது. புஷ்பா கடந்த 4 நாட்களாக தொடர்ந்து அஞ்சலகம் வந்தும் அவருக்கு டோக்கன் வழங்கப்படவில்லை. நேற்றும் வழக்கம்போல் அஞ்சல் நிலையத்திற்கு வெளியே கடும் வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்தும் டோக்கன் வழங்கப்படாததால் விரக்தி அடைந்த புஷ்பா தனது இரண்டு குழந்தைகளுடன் அஞ்சல் அலுவலகம் முன்பு உள்ள திசையன்விளை - திருநெல்வேலி மெயின்  சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

 தகவலறிந்து வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர், வி.ஏ.ஓ செல்வக்குமார் ஆகியோர் புஷ்பாவிடம் சமாதானம் பேசினர். இதற்கிடையில் சம்பவம் குறித்து அறிந்த திசையன்விளை தாசில்தார் செல்வக்குமார், வி.ஏ.ஓ செல்வக்குமாரின் செல்போனில் தொடர்பு கொண்டு விபரம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அதே செல்போனில் புஷ்பாவை தொடர்பு கொள்ள செய்யுமாறு கூறினார். அதன்படி செல்போனில் பேசிய புஷ்பாவிடம் உடனே இரண்டு குழந்தைகளுக்கும் ஆதார் கார்டு எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் உறுதி அளித்ததை தொடர்ந்து புஷ்பா போராட்டத்தை கைவிட்டார்.

இதுகுறித்து அஞ்சல் அலுவலக அதிகாரியிடம் கேட்ட போது, ‘ஒரு நாளைக்கு 20 முதல் 30 டோக்கன் வரையே வழங்க முடியும். மேலும் சர்வர் வேலை செய்யவில்லை எனில் வழங்கப்பட்ட டோக்கனுக்குமே ஆதார் எடுக்க முடியாமல் போகும் நிலை ஏற்படும். அஞ்சலகத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதுடன், திசையன்விளையை சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் இங்கு வருவதால் கூட்டம் அலைமோதுகிறது. புதிதாக ஆதார் கார்டு எடுப்பதுடன், ஆதார் கார்டில் செல்போன் எண்ணை இணைப்பதால் மேலும் சிரமம் ஏற்படுகிறது.’ என்றார். திசையன்விளை பகுதியில் அரசு சார்பில் ஆதார் கார்டு எடுப்பதற்கு தனியாக சேவை மையம் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Tarna , Young lady, Tarna
× RELATED புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு கூடுதல்...