வீடு, வீடாக சேகரித்து கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில மாதமாக வீடு வீடாக  சென்று ரேஷன் அரிசியை சேகரித்து கேரளாவுக்கு கடத்தும் சம்பவத்தால்  அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவ்வப்போது போலீசார் மற்றும்  சிவில்சப்ளை அதிகாரிகள் கண்காணித்து பறிமுதல் செய்தாலும், அந்த செயல்பாடு  என்பது இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதில் நேற்று முன்தினம்,  ஜோதிநகரில் உள்ள அமைதிநகர் பகுதியில் சிலர், வீடு வீடாக ரேஷன்  அரிசியை  குறைந்த விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்த காரில் தயார் நிலையில்  இருப்பதாக கிழக்கு போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு  விரைந்த போலீசார், ஜோதிநகரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதில்,  அமைதிநகரின் ஒரு பகுதியில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. இதையறிந்த போலீசார், அந்த காரை திறந்து பார்த்தபோது, அதில் சுமார் 20க்கும்  மேற்பட்ட மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்துள்ளது. ஆனால், காருடன் ரேஷன்  அரிசியை கடத்தி வந்தவர்கள் யார்? என தெரியவில்லை. ரேஷன் அரிசியை வீடு வீடாக  வாங்கி கேரளாவுக்கு கடத்த முயன்ற  நபர்கள், அங்கிருந்து தப்பியுள்ளனர்.  இதையடுத்து, காருடன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து,  விசாரிக்கின்றனர்.

அதுபோல்,  பொள்ளாச்சியை அடுத்த  அம்பராம்பாளையம் பகுதியில் ஆனைமலை போலீசார் வாகன  சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்தபோது  அதில் இருந்த, சுமார் 30 மூட்டைகளில் மொத்தம் ஒருடன் ரேஷன் அரிசி  இருந்துள்ளது. இதையடுத்து ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்ற  கேரள  மாநிலம் கொழிஞ்சாம்பாறையை சேர்ந்த அஜ்மல் என்பவரை பிடித்து  போலீசார்  விசாரித்தனர். விசாரணையில், குஞ்சிபாளையம் கிராம பகுதியில் வீடு வீடாக  ரேஷன் அரிசியை சேகரித்து கடத்த  முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து, அஜ்மலை  போலீசார் கைது செய்ததுடன், காருடன் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories:

More
>