பெட்ரோலில் வரி கட்ட முடியவில்லை என பால்காரர் நீதிமன்றத்தை நாடுகிறாரா ?: காருக்கு நுழைவு வரி விலக்கு கோரிய நடிகர் தனுஷுக்கு ஐகோர்ட் கண்டனம்!!

சென்னை: வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தனது ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விலக்கு கோரிய நடிகர் தனுஷுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் தரப்பில் விசாரணைக்கு வந்த போது, கார் வாங்கும் மனுவில் என்ன பணியில் இருக்கிறீர்கள் என குறிப்பிடவில்லையே ஏன் ?.பணியையோ அல்லது தொழிலையே குறிப்பிட வேண்டியது அவசியமில்லையா?.ரூ.50க்கு பெட்ரோல் போடும் பால்காரர் கூட பெட்ரோலில் உள்ள வரியை கட்டுகிறார்.பெட்ரோலில் வரி கட்ட முடியவில்லை என பால்காரர் நீதிமன்றத்தை நாடுகிறாரா ?ஒரு சோப்பு வாங்கும் சாமானியர் கூட வரி செலுத்துகிறார்?.மக்கள் வரிப்பணத்தில் போடும் சாலையை பயன்படுத்தும் போது வரியை செலுத்த வேண்டியது தானே?.நீங்கள் எவ்வளவு கார் வேண்டுமானாலும்  வாங்குங்கள். ஆனால் செலுத்தும் தொகையை முழுமையாக செலுத்துங்கள்.எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்பதை வணிக வரி துறை கணக்கீடு செய்து பகல் 2.15க்குள் கூற வேண்டும். வணிக வரி கணக்கீடு அதிகாரி இன்று மதியம் நேரில் ஆஜராக வேண்டும்,என்று காட்டமாக தெரிவித்தார். இதனிடையே திங்கள் கிழமைக்குள் சொகுசு காருக்கான நுழைவு வரியை செலுத்த தயார் என்று நடிகர் தனுஷ் தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட நிலையில், மனுவை வாபஸ் பெறுவதாக நடிகர் தனுஷ் தரப்பு விடுத்த கோரிக்கையை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார்.

வழக்கின் பின்னணி

இறக்குமதி வாகனங்களுக்கு நுழைவு வரி விதிக்க தடை விதித்து கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சென்னை  உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்த வழக்கில் உச்ச நீதிமன்றம், நுழைவு வரி வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக 2019ல் தீர்ப்பளித்தது.  இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி  செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடைகோரி நடிகர் தனுஷ் சென்னை  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நுழைவு வரியாக 60  லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து  தனுஷ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் 50 சதவீத வரியை  செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்யலாம் என்று 2015ல்  உத்தரவிட்டது.

இதையடுத்து,  30 லட்சத்து 33 ஆயிரத்தை செலுத்தியதாக தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை  அடுத்து, விதிகளை பின்பற்றி பதிவு செய்ய 2016 ஏப்ரலில் நீதிபதி  எம்.துரைசாமி உத்தரவிட்டிருந்தார்.இந்த வழக்கு, நீதிபதி  எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நடிகர் தனுஷ்  தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து, விசாரணையை ஆகஸ்ட் 5ம்  தேதிக்கு தீர்ப்புக்காக தள்ளிவைத்தார். அதேபோல இறக்குமதி காருக்கு நுழைவு  வரி விலக்கு கோரிய பில்ரோத் மருத்துவமனை தொடர்ந்த வழக்கையும் தீர்ப்புக்காக நீதிபதி ஆகஸ்ட் 5ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இதையடுத்து, இந்த இரு வழக்குகளிலும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் இன்று தீர்ப்பளித்தார்.

Related Stories:

More
>