×

தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு உறுப்பினராக திமுக எம்பி தயாநிதி மாறன் நியமனம்

புதுடெல்லி: ஒன்றிய முன்னாள் தொலைத் தொடர்புத்  துறை அமைச்சரும், மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக எம்பி.யுமான தயாநிதி மாறன், ‘தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா’ தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கூட்டுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் முக்கிய தலைவர்கள் உள்ளிட்டோரின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கிளப்பி வருகின்றன. இதுபோன்ற நிலையில், ஒன்றிய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சரும், மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக எம்பி.யுமான தயாநிதி மாறன், ‘தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா’ தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான அறிவிப்பு, மக்களவையில் நேற்று வெளியிடப்பட்டது.  

நாடாளுமன்றம் முடங்கியுள்ள நிலையில், இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் வாட்ஸ் அப் ஒட்டு கேட்பு குற்றச்சாட்டுகள் பத்திரிகைகளில் வெளியானபோது, அப்போதே மக்களவையில் அது பற்றி தயாநிதி மாறன் குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட தயாநிதி மாறன், இக்குழுவின் தலைவரான பி.பி.சவுத்ரியை சந்தித்து பேசினார். தயாநிதி மாறன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், மக்களின் தனிநபர் தகவல் பாதுகாப்பாக இருப்பதற்கான தகுந்த சட்டங்களை உருவாக்க பணியாற்றுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags : Personal Information Security Bill Member of Parliamentary Joint Committee DMK MP Dayanidhi Maran appointed
× RELATED லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி: தெலங்கானாவில் கோரம்