வெளிநாட்டு காருக்கு நுழைவு வரி விலக்கு கோரி நடிகர் தனுஷ் மனு: ஐகோர்ட்டில் இன்று தீர்ப்பு

சென்னை: வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தனது காருக்கு நுழைவு  வரி விலக்கு கோரி நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம்  இன்று தீர்ப்பளிக்கவுள்ளது. இறக்குமதி வாகனங்களுக்கு நுழைவு வரி விதிக்க தடை  விதித்து கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சென்னை  உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கேரள உயர்  நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்த வழக்கில் உச்ச நீதிமன்றம், நுழைவு வரி  வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக 2019ல் தீர்ப்பளித்தது.  இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி  செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடைகோரி நடிகர் தனுஷ் சென்னை  உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நுழைவு வரியாக 60  லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து  தனுஷ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் 50 சதவீத வரியை  செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்யலாம் என்று 2015ல்  உத்தரவிட்டது.

இதையடுத்து,  30 லட்சத்து 33 ஆயிரத்தை செலுத்தியதாக தனுஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை  அடுத்து, விதிகளை பின்பற்றி பதிவு செய்ய 2016 ஏப்ரலில் நீதிபதி  எம்.துரைசாமி உத்தரவிட்டிருந்தார்.இந்த வழக்கு, நீதிபதி  எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நடிகர் தனுஷ்  தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து, விசாரணையை ஆகஸ்ட் 5ம்  தேதிக்கு தீர்ப்புக்காக தள்ளிவைத்தார். அதேபோல இறக்குமதி காருக்கு நுழைவு  வரி விலக்கு கோரிய பில்ரோத் மருத்துவமனை தொடர்ந்த வழக்கையும் தீர்ப்புக்காக நீதிபதி ஆகஸ்ட் 5ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார். இதையடுத்து, இந்த இரு வழக்குகளிலும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளார்.

Related Stories: