×

ஒலிம்பிக் மல்யுத்தம் தங்க வேட்டையில் ரவிகுமார்

டோக்கியோ: ஆண்கள்  மல்யுத்தம் 57 கிலோ பிரீஸ்டைல் பிரிவு இறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்தியாவுக்கு 4வது பதக்கத்தை உறுதி செய்த ரவிகுமார் தாஹியா, தங்கப்பதக்கம் வெல்ல இன்று ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி வீரர் ஜாவூர் உகுவேவுடன் மோதுகிறார்.ஒலிம்பிக் போட்டியில் நேற்று  காலை  நடந்த மல்யுத்த போட்டியில் இந்தியா வெற்றியுடன் தொடங்கியது. 57 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் களமிறங்கிய ரவிகுமார், முதல் சுற்றில்  கொலம்பியாவின்  ஆஸ்கர் டைகரோசை  13-2 என்ற புள்ளிக் கணக்கில் அதிரடியாக வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். தொடர்ந்து காலிறுதியில்   பல்கேரிய வீரர் வாலன்டினோவ் ஜியார்ஜியையும் 14-4 என்ற கணக்கில் அபாரமாக வென்று  அரையிறுதிக்கு  முன்னேறி பதக்க வாய்ப்பை உருவாக்கினார்.மாலையில் நடந்த அரையிறுதியில்  கஜகிஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சனயேவை எதிர் கொண்டார். பெரும் சவாலாக இருந்த நூரிஸ்லாமை சமாளித்த ரவிகுமார் முதல் 3 நிமிடங்களில்  2-1 என முன்னிலை பெற்றார். அடுத்த 3 நிமிட ஆட்டம் தொடங்கியதும், ரவிகுமாரை  கிடுக்கிப்பிடி போட்டு அசையவிடாமல் செய்ததால்  நூரிஸ்லாம் 9-2 என முன்னேறினார்.

ஒன்றரை நிமிட ஆட்டம் எஞ்சியிருந்தபோது ரவிகுமார் வலுவாக மோதி,  நூரிஸ்லாமை எல்லைக் கோட்டுக்கு வெளியே தள்ளியதால் 7-9 என இடைவெளி குறைந்தது. காலில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு ஆட்டத்தை தொடர்ந்த  நூரிஸ்லாம், ரவிகுமாரின் உடும்புப்பிடியில் சிக்கி எழ முடியாமல் தவிக்க...   ரவிகுமார் த்ரில் வெற்றியை வசப்படுத்தினார். இந்த வெற்றியால் குறைந்தபட்சம் வெள்ளி வெல்வதை உறுதி செய்துள்ள ரவிகுமார், இன்றைய பைனலில் தங்கம் வெல்லும் முனைப்புடன் ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி வீரர் ஜாவூர் உகுவேயை எதிர்கொள்கிறார். இந்தியாவுக்கான 4வது பதக்கம் உறுதியான நிலையில்  அது தங்கமா, வெள்ளியா என்பது இன்று தெரியும்.

வெண்கலத்துக்காக தீபக் புனியா: ரவிகுமாரை போலவே மற்றொரு இந்திய மல்யுத்த வீரர் தீபக் புனியா அடுத்தடுத்து வெற்றிகளை குவித்தார். நேற்று 86 கிலோ எடை பிரிவில் களம் கண்ட தீபக், முதல் சுற்றில் சீன வீரர்  ஜுசென் லின்னை 6-3 எனவும்,  காலிறுதியில்  நைஜீரியா வீரர் எகரேகேம் அஜியோமோரை 12-1 என்ற புள்ளிகள் கணக்கில் அதிரடியாக வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.ஆனால் அரையிறுதியில் அமெரிக்க வீரர்  டேவிட் மோரிசிடம் 10-0 என்ற புள்ளி கணக்கில் படுதோல்வியை சந்தித்தார். ஆனாலும் இன்று நடைபெற உள்ள மறுவாய்ப்பு ஆட்டத்தில் (ரிபசாஜ்) வெண்கலத்துக்காக மல்லுக்கட்டுவார்.அன்ஷு ஏமாற்றம்: மகளிருக்கான 57கிலோ எடை பிரிவு  மல்யுத்தப் போட்டியில்  பெலாரஸ் வீராங்கனை  இரியனா குரச்கினாவிடம் 2-8 என்ற புள்ளிக் கணக்கில்  இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் தோற்றார். இன்று வெண்கலத்துக்காக மறுவாய்ப்பு ஆட்டங்களில் மோத உள்ளார்.

Tags : Ravikumar ,Olympic , Olympic wrestling Ravikumar in the gold hunt
× RELATED புதுச்சேரியில் பாஜக பிரமுகர்...