குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட 700 வீடுகளுக்கு ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பம்: கலெக்டர் அலுவலகத்தில் அலைமோதிய கூட்டம்

காஞ்சிபுரம்: தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்கதிர்பூர் பகுதியில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2,112 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. தற்போது, அந்த குடியிருப்புகள், பயனாளிகளுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளன. இதில் 1406 குடியிருப்புகள் வேகவதி நதிக்கரையில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 706 குடியிருப்புகளுக்கு விருப்பம் உள்ள பயனாளிகள் விண்ணபிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

காஞ்சிபுரம்நகராட்சி மற்றும் சுற்றியுள்ள ஊராட்சி  மக்கள், அரசுக்கு சொந்தமான நீர்நிலைகள், அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் ஆக்கிரமிப்பாளர்கள், வீடற்ற நலிவடைந்த பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயனாளிகள், பட்டியல் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பெறப்பட்டு அவர்களுக்கு குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும். மேலும், இத்திட்டத்தில் ஒரு குடியிருப்புக்கான செலவு தொகையில் மத்திய மற்றும் மாநில அரசின் மானியத் தொகை போக மீதமுள்ள ₹1.5  லட்சம் மட்டும், பயனாளிகளின் பங்குத் தொகையாக செலுத்த வேண்டும். இந்தியாவில் தனது பெயரிலோ, தனது குடும்ப உறுப்பினர் பெயரிலோ சொந்தவீடு இல்லாமலும், ஆண்டு வருமானம் ₹3 லட்சத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும் என்ற சான்று அளிக்கவேண்டும்.

மேலும் விண்ணப்பிக்கும் பயனாளிகள், குடும்பத்தலைவர் மற்றும் குடும்பத்தலைவி ஆகியோரின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் கலெக்டர் தலைமையில், நேற்று காலை பரிசீலனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.இதை தொடர்ந்து, 706 வீடுகளுக்கு விண்ணபிக்க காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள், நேற்று காலை கலெக்டர் அலுவலகதில் திரண்டனர். ஏராளமான பெண்கள் கை குழந்தைகளுடன் முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பங்களை வழங்கினர். இதனால் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது. அருகில் உள்ள ஜெராக்ஸ் கடைகளில், பல்வேறு ஆவணங்களின் நகல்கள் எடுக்க மக்கள் திரண்டதால், அங்குள்ள ஊழியர்கள் திக்குமுக்காடினர்.

Related Stories:

More
>